Wednesday, November 16, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு!.

Wednesday, November 16, 2011
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மின்நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட குழுவினர், விஞ்ஞானிகளிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையம் குறித்து மக்களின் அச்சத்தை போக்கவும், பாதுகாப்பை ஆய்வு செய்யவும் நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதில் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கூடங்குளம் வந்தனர். அணுமின்நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக இயக்குனர் சுகுமாறன், அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சாந்தா, மங்களூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மத்தியஸ்தா ஆகியோர் இன்று காலை கூடங்குளம் வந்தனர். அவர்கள் ஏற்கனவே உள்ள 9 பேர் குழுவுடன் இணைந்து அணுமின் நிலையத்தில் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தனித்தனியாக பிரிந்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளுடன் கதிரியக்க பாதுகாப்பு, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வெப்பநீர், கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு, அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். மக்களின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். நாளையும் மத்தியக் குழு ஆய்வு தொடர்கிறது. 18-ம் தேதி தமிழக அரசு நியமித்துள்ள குழுவினருடனும் மத்திய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment