Tuesday, November 29, 2011

உலக நாடுகளில் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற சவால்களை எதிர் கொள்வதற்கு சர்வதேச இன்டர்போல் ஒத்துழைப்பு:கொழும்பில் ரவூப் அத்தல்லா!

Tuesday, November 29, 2011
உலக நாடுகளில் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற சவால்களை எதிர் கொள்வதற்கும், அதனை கையாள்வதற்கும் தேவையான பாரிய ஒத்துழைப்புக்களை இன்டர்போல் சர்வதேச அளவில் பொலிஸாருக்கு வழங்குவதாக இன்டர்போலின் தென் பசுபிக் மற்றும் ஆசியாவுக்கான தேசிய மத்திய பணியகத்தின் செயலாளர் நாயகம் ரவூப் அத்தல்லா தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இன்டர்போல் களவாடப்பட்ட அல்லது தொலைந்த பயன ஆவணங்கள், களவாடப்பட்ட மோட்டார் வாகனங்கள், நிர்வாக ஆவணங்கள், டி.என்.ஏ. தகவல்கள், விரல் அடையாளங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பல மில்லியன் தகவல்களை கொண்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் பொலிஸார் குற்றப்புலனாய்வு விசாரணை களுக்குத் தேவையான தரவுகளை இவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்டர்போலுடன் செயற்படுகின்ற தேசிய மத்திய பணிகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிய மற்றும் தென் பசுபிக் நாடுகளைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கான 10 வது பிராந்திய பயிற்சி பட்டறை நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஐந்து நாள் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கின் ஆரம்ப உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரே ஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த குலதிலக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் பெரேரா ஆகியோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரவூப் அத்தல்லா மேலும் உரையாற்றுகையில்:

இன்டர்போலின் தரவு தளத்தில் 133 நாடுகளிலிருந்து பெறப்பட்ட களவாடப்பட்ட அல்லது காணாமல் போன பயன ஆவணங்கள் தொடர்பான 15 மில்லியன் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 120 நாடுகளிலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பாக 4.5 மில்லியன் தகவல்களும், 46 நாடுகளிலிருந்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான டி.என்.ஏ. தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியிலுள்ள பொலிஸாருக்கு எமது தரவுத்தளம் தமது புலனாய்வு விசாரணைகளுக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்குகின்றன.

ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது உலகம் மிகவும் சிறியதாகிவிட்டது. போக்குவரத்து, தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றினால் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும்.

அதேபோன்று மேற்குறிப்பிட்ட அபிவிருத்திகள் சட்டவிரோத போதை வஸ்து, போலி ஆவணங்கள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோதமாக கள்ள நோட்டுக்கள் அச்சிடுதல் போன்ற குற்றச் செயல்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில்தான் இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இன்டர்போல் பாரிய மற்றும் முக்கிய பங்களிப்புக்களை செய்கிறது என்றார்.

அதேபோன்றே இலங்கையுடனும் நெருங்கி செயற்படுகின்றது.

பொது மக்களின் பாதுகாப்பு, பயங்கரவாதம், போதை வஸ்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்புக்கள், ஆட்கடத்தல், நிதி, உயர் தொழில்நுட்பம் மற்றும் ஊழல் போன்ற ஆறு விடயங்கள் தொடர்பில் இன்டர்போல் தரவுகளை பதிவு செய்துள்ளன என்றும் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் இது போன்ற பயிற்சிகளை வழங்குவதன் மூலம் தமது சேவையை மேலும் விஸ்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் பாரிய அளவில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் பொலிஸார் இன்டர் போலுடன் இணைந்து பாரிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 190 நாடுகளுக்கு பயிற்சி வழங்க இன்டர்போல் தீர்மானித்துள்ளது அதன் பத்தாவது பயிற்சிப் பட்டறையே இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment