Saturday, November 19, 2011செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது என்கிறார் டி.எம். ஜயரட்ன
வெள்ளைக் கொடி விவகாரத்தை மையப்படுத்தி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் எந்தவொரு சக்திக்கும் அடிபணிவதில்லை என்பதை இலங்கை, வரலாற்று ரீதியாக ஒப்புவித்துள்ளது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. இலங்கை உள்நாட்டு பயங்கரவாதத்தை பல சவால்களுக்கு மத்தியில் முழு அளவில் தோற்கடித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் டி.எம்.
ஜயரட்ண மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த நாட்டு தலைவர்களும் முப்படையினரும் இன்னோரன்ன தியாகங்களை செய்தனர்.
முப்படையினரே வீட்டிலிருந்து வெளியில் வந்து சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்களுக்கு இலங்கையர்கள் எந்நாளும் கடனாளிகளேயாவர்.
இந்த யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கிய முப்படைகளினதும் தளபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 66ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். இவரை உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச நாடுகளிலும் பலர் வாழ்த்தியுள்ளனர்.
இலங்கையை ஆக்கிரமிக்க படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை நேருக்கு நேர் நின்று தோல்வியடையச் செய்த வீரமிக்க சமூகமே எமது சமூகமாகும்.
உலகத்தில் எந்தவொரு நாட்டினாலும் முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போன பயங்கரவாதப் போரை இலங்கை வெற்றிகரமாக முடிவடையச் செய்தது. ஆனால் வெள்ளைக் கொடி விவகாரம் ஊடாக நாட்டை அபகீர்த்தியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே நாட்டிற்கு எதிரான அனைத்து சவால்களையும் தோல்வியடையச் செய்வோம். இன்று ஆசியாவில் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடு இலங்கை தான் என பிரதமர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment