Thursday, November 10, 2011ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சனைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற திவிநெகும ஒருங்கிணைப்பு கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளை உள்ளீர்க்கும் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜிதவேரகொட உட்பட அதிதிகள் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,
எமது நாட்டில் மூன்று கட்டங்களாகப் பிரித்து இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகிந்த சிந்தனைத் திட்டத்தினூடாக கட்டுமானங்கள் மேற்கொள்ளுதல். வாழ்வாதாரங்களை சமனாகக் கொண்டு போதல். அடுத்ததாக மக்களின் பாதுகாப்பு. பாதுகாப்பையும் மக்களின் ஒழுக்கப்பாடையும் அதே வேளையில் அதே சமனாகக் கொண்டு போதல். இந்தத்திட்டத்தின் அடிப்படையில் தான் அபிவிருத்தி பிரித்து எங்களுடைய இலங்கைத் திருநாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இதை நீங்கள் ஒரு தூர நோக்கான சிந்தனையுடன் சிந்திப்பீர்களாக இருந்தால் மாத்திரம் தான் விளங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் சிலர் குறைகளைக் கூறுவார்கள் விதண்டாவாதமாகப் பேசுவார்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களது தூரநோக்குப் பயணத்தை புரிந்து கொள்ள முடியாது.
இலங்கை வரலாற்றில் ஒரு அரசாங்கமும் செய்யாதது. இந்தப் பெருமையெல்லாம் எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களைத் தான் சேரும். வீதிகள் பாலங்கள் அமைக்கும் பணியை இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதியும் மேற்கொள்ளவில்லை. இன்று மட்டக்களப்பும் திருகோணமலையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 5பெரிய பாலங்கள். நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இன்று நாங்கள் படுவான்கரையையும் எடுவான்கரையையும் இணைப்பதற்கு பாலங்களை போடுகின்றோம். மண்முனைத்துறைப் பாலம் கட்டப்போகின்றோம். வவுணதீவுப்பாலம் புனரமைக்கின்றோம். இதே போன்று எத்தனை மாவட்டங்களை தலைநகருடன் இணைக்கின்ற பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் நாடு பூராகவும் சென்று பார்த்தால் விளங்கும்.
அதேபோன்றுதான் அடுத்த கட்டமான பாடசாலைக் கட்டடங்கள் பாடசாலை அபிவிருத்திகள் ஆயிரம் பாடசாலைத் திட்டம். .அதிலே 14 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு 6கோடி ரூபா ஒரு பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டு முதல் கட்டடத் தொகுதியை முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் அன்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் திறந்து வைத்தார்.
14 பாடசாலைகள் அதில் அமைக்கப்படப்போகின்றன. மேலதிகமாக நாங்கள் பாடசாலைகளை கோரியிருந்தோம். அதற்காக வருகின்ற வருடம் 6000 பாடசாலைத்திட்டம் என்று சொல்லி ஜனாதிபதி அந்தத் திட்டத்தை அமுலாக்கப் போகின்றார். ஏனென்றால் கல்வியை வளர்ப்பதற்கு. நாங்கள் கட்டுமானங்களை அமைக்கின்றபொழுது வீதிகள் பாலங்களை போடுகின்றபொழுது கட்டடங்களை கட்டுகின்றபொழுது மக்களின் வாழ்க்கைத்தரம் என்னவாவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் என்னவாவது என்பதை சிந்தித்துத்தான் இந்த வாழ்வாதார நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி என்பது உணருகின்ற விடயமாக உள்ளது. இந்த அரசாங்கத்தில் எதுவித குறையுமில்லை. ஜனாதிபதி அவர்கள் பூரண வளங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறார். அதற்குரிய பிரதிபலன்களை அளிக்கின்ற அதிகாரிகளாக நாங்கள் இருக்க வேண்டும். அரசியல் என்பது அபிவிருத்திக்காக இருக்க வேண்டும். ஒரு அரசியல்வாதியால் உங்களுக்கு பலன் வர வேண்டும். அந்த அரசியல்வாதி உங்களின் நலன் கொண்டு செயற்பட வேண்டும்.
மக்களுக்கு உரிய முறையில் செயற்பாடுகளை காட்ட வேண்டும். வீணாக எதிர்க்கட்சிகளுடன் இருந்துகொண்டு விதண்டாவாதங்களை பேசிக்கொண்டு இருப்பதற்கு நீங்கள் அனுப்பி வைத்தால் அவர்களால் முடியுமா உங்களை உள்வாங்குவதற்கு. அவர்களால் முடியுமா அபிவிருத்தி செய்வதற்கு. காலத்தை கடத்திக் கொண்டு இருப்பார்கள்.
மட்டக்களப்பை பொறுத்தவரையிலே வடக்கு கிழக்கிலே இன்று முதன்மையான மாவட்டம். அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒரு முன்மாதிரியான மாவட்டமாக எங்களுடைய மாவட்டம் இருக்கிறது. அந்தளவிற்கு இரவும் பகலுமாக இருந்து பூரண ஒத்துழைப்புகளுடன் வேலைகளை செய்து வருகின்றோம். அதற்கு உண்மையில் எமது அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.
இன்று ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சனைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒரு தேசியக் கட்சியில் போகும்பொழுது எமது உரிமைகளும் பாதுகாக்கப்படும் வளமும் வந்துகொண்டிருக்கும் மக்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படும். நாம் போராடியிருக்கிறோம். இதற்கும் காரணம் அரசியல்வாதிகள் தான். அன்றிருந்த அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் துவே~ங்கள் பேசினார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளும் பேசினார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் பேசினார்கள். அதனால் பாரிய விரிசலும் குரோதமும் வந்தது. பேசிய அரசயல்வாதிகளெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள். நாங்கள் ஆளுக்காள் அடிபட்டு கிட்டத்தட்ட 90ஆயிரம் பேர் இறந்தோம். ஓடிய அரசயல்வாதிகளெல்லாம் இப்போது வந்துவிட்டார்கள். ஏனென்றால் இப்போது அமைதி வந்துவிட்டது. நாட்டில் எந்தவொரு பிரச்சனையுமில்லை.
அன்றைக்கு தூண்டிவிட்ட சம்பந்தன் தான் இன்று வந்திருக்கிறார். அன்றைக்கு போராட்டத்திற்கு வாங்கடா என்று கூறிய மாவை சேனாதிராஜா தான் இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வந்து நிற்கிறார். அவர்கள் அவர்களின் சமூகத்தை வைத்துத் தான் அரசியல் நடத்துவார்கள்.
விடுதலைப்புலிகள் பிள்ளைகளை பிடிக்கின்றனர் என்று தப்பி ஓடி வந்தால் ஆமி பிடிக்கும். என்ன செய்வதென்று தாய்மார் தவித்து திரிந்தார்கள். இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் யுத்தத்தை நிறுத்தி கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை அரசியலை கொண்டுவரவேண்டும். இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உலகத்தில் போய் தமிழருக்காக குரல் கொடுக்கிறதாம் என்று போயிருக்கிறார்கள்.
மட்டக்களப்பிலே இருக்கின்ற மூன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கூட்டிச் சென்றிருக்கலாம் தானே. மட்டக்களப்பிலுள்ளவனும் தமிழன் தானே. இதை நாங்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கிருக்கும் உறுப்பினர்களை குற்றம் சாட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னால் அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
முதன்முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஆட்களைப் போட்டு அரசியலுக்கு கொண்டுவந்தது நான் தான். 4உறுப்பினர்களை கொண்டுவந்தேன். அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அங்கிருப்பவர்களின் தலைமைத்துவப் போக்குகளும் எங்களை மட்டந்தட்டி நடத்துவதும் எனக்குப் பிடிக்காது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைப் பாருங்கள் எங்களை உயர்த்தவேண்டும் என்பதற்காக இப்படியான திட்டங்களெல்லாம் போட்டு உயர்வான சிந்தனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ் மக்களை கௌரவிக்க வேண்டும் எனும் நோக்கில் எனக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி தந்து கட்சியிலும் பெரிய பதவி தந்து வைத்திருக்கிறார். நாங்கள் ஒற்றுமையாக இருப்பது தான் ஒரே வழி. நாங்கள் சேர்ந்து போக வேண்டும். அப்பொழுது எல்லாம் வரும். இன்று எங்களுக்கு என்ன வளம் இல்லை. எல்லாம் இருக்கிறது. நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்த வருடம் 8000ஆயிரம் மில்லியனை மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். இன்னும் செலவழித்து முடியவில்லை.
வெள்ளத்தில் அழிந்த அத்தனை பேருக்கும் விதை நெல் இலவசமாக எடுத்துக் கொடுத்திருக்கிறோம். 6000பேருக்கு வீட்டிற்கு காசு எடுத்துக் கொடுத்திருக்கிறோம். தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடுகளை கட்டப் போகின்றோம்.
இன்று எமது மாணவர்களின் திறமை அதிகரித்துச் செல்கிறது. நன்கு சித்தியடைகிறார்கள். படுவான்கரை மாணவர்கள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள். படுவான்கரையில் உள்ள மக்கள் அனைவரும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். மட்டக்களப்பு மாவட்டம் ஒரு வளமான மாவட்டம். ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் இங்கு வரப் போகின்றன. அந்தளவு கரிசனையோடு ஜனாதிபதி செயற்படுகிறார்.
No comments:
Post a Comment