Tuesday, November 08, 2011நெல்லை: நாட்டின் மின்சார பற்றாக்குறையை போக்க நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் பல ஆயிரம் கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஓரிரு மாதத்தில் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில் திடீரென்று ஒரு பிரிவினர் மக்களை திரட்டி அணுமின் நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுமின் நிலையத்தால் தென் மாவட்டங்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளது, பூகம்பம், சுனாமி தாக்கினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். அதே சமயம் அணுமின் நிலையம் நாட்டுக்கு அவசியம் தேவை என்று வரவேற்று ஆதரவாளர்கள் நெல்லையிலும், கன்னியாகுமரியிலும் பெருந்திரளாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு நேரில் சென்று பல மணி நேரம் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. எனவே அணு கதிர்வீச்சு குறித்து அச்சப்பட தேவையில்லை. கூடங்குளம் அணுமின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை என்றார்.
அப்துல்கலாமின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்தப் பிரச்சினையில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் போராட்டக் குழுவினருடன் பேசி எடுத்துக்கூற மத்திய அரசு 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
இதேபோல் தமிழக அரசும் தனியாக ஒரு குழுவை நியமித்துள்ளது. மத்திய அரசு நிபுணர் குழுவினர் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து ஆலோசித்து அறிக்கை அளிக்க நெல்லை சென்றனர். அந்த குழுவினர் தமிழக அரசு அமைத்துள்ள குழுவுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தியது.
காலை 11.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மத்திய குழுவைச் சேர்ந்த முத்துநாயகம் (நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்), அய்யர் (கதிர்வீச்சு பாதுகாப்பு நிபுணர்), மத்தியஸ்தா (முன்னாள் பேராசிரியர்), சுகுமாறன் (சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக உயிரி அறிவியல் துறை இயக்குனர், பேராசிரியர் பிரமோஸ் (மும்பை டாடா மருத்துவமனை இயக்குனர்), கண்ணன்(சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்), மேத்தா (மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர், பாலு (பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர்), லீ (கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்), ஸ்டீபன்அருள்தாஸ் (கனநீர் வாரிய முன்னாள் இயக்குனர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில குழுவை சேர்ந்த நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, தங்கராஜ் மற்றும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த புஷ்பராயன், மைபா ஜேசுராஜன் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் மத்திய-மாநில குழுவினர் போராட்டக் குழுவினரை சந்தித்து அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து எடுத்து கூறுகிறார்கள்.
முன்னதாக போரட்டக்குழுவை சேர்ந்த புஷ்பராயன் நிருபர்களிடம் கூறும் போது, மத்திய அரசு குழுவினரிடம் நாங்கள் எங்கள் கருத்தை சொல்ல வந்துள்ளோம். 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுத்துபூர்வமாகவும், வாய்மொழி வாயிலாகவும் முன்வைப்போம். கூடங்குளம் பிரச்சினைக்கு இன்று ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடும் என கூற முடியாது. இதே போன்று பல அமர்வுகள் நடக்கலாம். தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்றார்.
தமிழக வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம் அணுமின் நிலையம்; அப்துல் கலாம் கருத்துக்கு ஆதரவு தருவீர்!
அன்புள்ள வாசகர்களே,
இன்று தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்பற்றாக்குறையைச் சமாளிக்கவும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கூடுதல் மின்சார உற்பத்தி அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இன்றைய கால கட்டத்தில் அணுமின்நிலையம் மூலமே அதிக அளவு மின்சாரத்தை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைக்கப்பட்டு, அதன் உற்பத்தியைத் துவக்கும் நிலையில் உள்ளது.
10 ஆண்டு கால உழைப்பில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி உள்ள இந்த அணுமின் நிலையத்தின் பலனை தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்க இருக்கும் இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே கிளப்பி விடப்பட்டுள்ள தேவையில்லாத அச்சத்தின் மூலம் அந்த திட்டத்தின் பலன் நமக்கு கிடைக்காமல் முடங்கிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த அணுமின் நிலையம் குறித்து பலரும் பல தகவல்களை வெளியிட்டு வரும் இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள நமது மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல் கலாம் நமது தினமலர் வாசகர்களுக்காக எழுதியுள்ள கட்டுரைகள் தினமலர் நாளிதழிலும் இணைய தளத்திலும் வெளியிட்ப்பட்டது. இதை நீங்கள் படித்திருப்பீர்கள். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும், அது தொடர்பாக கிளப்பப்பட்டுள்ள சந்தேகங்கள் தேவையற்றது என்பதும் இந்த கட்டுரைகள் உங்களுக்கு தெளிவாக்கி இருக்கும்.
இந்த கட்டுரைகள் மற்றும் அப்துல் கலாமின் ஆய்வு குறித்த பேட்டி செய்திகளுக்கு நீங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இ- மெயில் மூலம் உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்து வருகிறீர்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விஷயத்தில் நீங்கள் காட்டியுள்ள ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு மேலும் வலு கட்டும் வகையில் அவருடைய இ-மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அனுப்பும் மெயிலில், நீங்கள் இணையதளத்தில் வெளியான அப்துல் கலாம் கட்டுரைகளைப் படித்திருந்தால், அதைக் குறிப்பிட்டு, மெயில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். நாடு வளம் பெற நமது பங்கைச் சிறப்பாக செய்வோம்.
டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் முகவரி:
apj@abdulkalam.com
No comments:
Post a Comment