Tuesday, November 08, 2011மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று இரவு 10 மணி அளவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 7க்கும் அதிகமான படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். துப்பாக்கிகளை திருப்பி வைத்து இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் சண்முகம், முத்துராமலிங்கம், பாண்டி, பஞ்சமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அலறித்துடித்த அவர்கள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன் பிறகும் மீனவர்களின் வலைகளை வெட்டி கடலுக்குள் எறிந்தனர். படகின் கண்ணாடிகளை உடைத்தனர். மீன்பிடி சாதனங்களையும் தூக்கி தண்ணீரில் வீசினர்.
படுகாயம் அடைந்த 4 மீனவர்களையும் மற்ற மீனவர்கள் மீட்டு நள்ளிரவில் கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களை தாக்கி தொழில் செய்ய விடாமல் தடுக்கும் இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment