Friday, November 25, 2011

தொடரும் மழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு: பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன!

Friday, November 25, 2011
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறையில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை - அம்பாறை வீதியின் மாவடிப்பள்ளி சின்னப் பாலத்திற்கு மேலாக வெள்ள நீர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாலத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வீதிகள் மற்றும் கட்டடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் வள்ளங்களின் மூலம் இடம்பெயர்ந்து பொது கட்டடங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக யாழ்ப்பாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ் தனியார் பஸ் நிலையம், தபால் நிலையம், நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக செல்லும் வீதி மற்றும் ஆலயத்திற்கு பின்புறமாக செல்லும் வீதிகளி்ல் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

யாழ். குடா நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 97.1 மில்லிமீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment