Friday, November 25, 2011சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிரை வேலி காப்பது போல, கண்ணை இமை காப்பது போல, மக்களை காப்பது காவல்துறை என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும், தமிழகக் காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதனை நன்கு உணர்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டே காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில் காவல் நிலையங்களுக்கு நவீன வாகனங்கள், அதிநவீன ஏ.கே.47ரக துப்பாக்கிகள் போன்றவற்றை அளித்து, அதைப் பயன்படுத்துவதற்கன பயிற்சிகளையும் அளித்தார்.
இது மட்டுமல்லாமல், டிஜிட்டல் மைக்ரோவேவ் நெட்ஒர்க் மூலம் அனைத்து காவல் நிலையங்களையும் இணைத்தல் உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தார்.
காவல் நிலையங்களுக்கான கட்டடம் கட்டுதல், காவல் துறையினருக்கு வீடுகள் கட்டுதல், வாகனங்கள் வாங்குதல், நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்தல், பயிற்சி, தொடர்பு வசதி தடய அறிவியல் துறைக்கான நவீன உபகரணங்கள் வாங்குதல் ஆகிய காவல்துறை நவீனமயமாக்கல் திட்டப்பணிகளை மேற்கொள்ள 47 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
காவல் நிலையங்களுக்கான கட்டடங்கள் கட்ட 15 கோடியே 51 லட்சம் ரூபாய், காவலர் வீடுகள் கட்ட 5 கோடியே 6 லட்சம் ரூபாய், வாகனங்களுக்கென 9 கோடியே 38 லட்சம் ரூபாய், தொடர்பு வசதிக்கென 23 லட்சம் ரூபாய், பயிற்சிக்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய், உபகரணங்கள் கொள்முதல் செய்ய 14 கோடியே 60 லட்சம் ரூபாய், தடய அறிவியல், ஊர்க்காவல் படை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளுக்கு 1 கோடியே 51 லட்சம் ரூபாய் என மொத்தம் 47 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணிகள் மூலம், காவல்துறை மேலும் நவீனமயமாக்கப்பட்டு, அதன் பணிகள் மேம்படுவதுடன், காவல்துறையினரின் திறமையும் ஆற்றலும் பெருகி, தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக மலர்வதற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment