Sunday, November 20, 2011

கூடங்குளம் பிரச்சினை: அணுமின் ரகசியத்தை கேட்டு மிரட்டுவதா? போராட்டக்காரர்களுக்கு காங்.-பா.ஜனதா, சோ கண்டனம்!

Sunday, November 20, 2011
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் அணு உலை பாதுகாப்பில் முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் கேட்ட 50 கேள்விகளுக்கும் மத்திய நிபுணர் குழுவினர் பதில் அளித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்தின் திட்ட வடிவமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை வேண்டும் என்று கேட்டனர்.

இந்த இரு ஆவணங்களும் மிகவும் ரகசிய மானவை. அவற்றை வெளியிட முடியாது. அவற்றை அவர்கள் கேட்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய குழுவினர் கூறி உள்ளனர். போராட்டக் குழுவினர் ரகசியங்களை கேட்பது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷிய கூட்டு தயாரிப்பு. அதன் வரைபடம், அமைவிடம் போன்ற ரகசியங்களை போராட்டக்குழு வினர் கேட்பது ஏன்? அணுசக்தியால் ஆபத்து ஏற்படும் என்று சொல்பவர்கள் அணுமின் நிலைய வரைபடத்தை கேட்பது ஏன்? ஏதோ ஒரு சக்தியின் தூண்டுதலால் நாட்டு ரகசியங்களை கேட்கிறார்கள்.

அந்த சக்தி எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மக்களுடைய சந்தேகங்களையும், கவலையையும் போக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்களும் நாட்டின் தேவை மற்றும் மக்கள் பாதுகாப்பு இவற்றை மனதில் வைத்துக்கொண்டு அணுமின் நிலையத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

அணு விஞ்ஞானியும், நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல்கலாம், முத்துநாயகம் போன்றவர்கள் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெளிவாக அறிக்கை கொடுத்த பிறகும் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதில் மக்கள் சந்தேகப்படுவது இயல்புதான்.

வேண்டுமென்றே மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். நிச்சயமாக அநத குழுவுக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். இந்த இடத்தில் அணுமின் நிலையம் அமைக்க கூடாது என்று 1988-ல் பா.ஜனதா போராடியது. அப்போது இந்த அமைப்புகள் எங்கே போனது? இப்போது எல்லா பணிகளும் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கும்போது இடையூறு செய்கிறார்கள் என்றால் இதன் பின்னணியில் அயல்நாட்டு சதி இருக்கலாம்.

போராட்டக் குழுவினர் கேட்டுள்ள கேள்விகளும் சாதாரண மக்கள் கேட்கும் கேள்வி அல்ல. அணு உலை பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் கேட்கும் கேள்விகளை இவர்கள் கேட்டுள்ளார்கள். இந்த கேள்விகளை தயாரித்தவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்களுக்கு ஏன் பதில் தேவைப்படுகிறது என்பது பற்றி விளக்கப்பட வேண்டும்.

போராட்டக் குழுவினர் கேட்கும் அனைத்து விபரங்களையும் கொடுத்தால் எப்போது வேண்டுமானாலும் எந்த பயங்கரவாத குழுவும் அல்லது வெளிநாட்டு சக்திகளும் அணு உலையை தாக்க முடியும். இப்படிப்பட்ட கேள்விகளை போராட்டக்குழுவினர் கேட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்தாளர் சோ கூறியதாவது:- அணு மின்நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்தில் எந்த நியாயமும் இல்லை. இவர்களின் போராட்டத்தை பார்த்தால் மத்திய அரசின் ஆட்சியை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்பது போல் உள்ளது.

அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மூத்த அணு விஞ்ஞானிகள் எல்லோரும் தெளிவாக விளக்கி சொல்லி உள்ளார்கள். அதையும் கேட்காமல் போராட்டத்தை தொடர்வது பிடிவாத குணமாக தெரிகிறது. அணு உலையை செயல்படாமல் வைத்தாலும் ஆபத்து ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள். அரசு இனியும் பொறுமை காட்டக்கூடாது. உடனடியாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அணுமின் நிலையத்தை தொடங்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment