Saturday, November 26, 2011

வடக்கு மாணவர்களின் உடலில் உள்ள குண்டுச்சன்னங்களை அகற்ற சிகிச்சை விபரங்களைத் திரட்டித் தந்தால் உடன் நடவடிக்கை-பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க அறிவிப்பு!

Saturday, November 26, 2011
வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடம்பில் தோட்டாக்கள், ஷெல் துண்டுகள் காணப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகப் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார். அத்தகைய மாணவர்களின் விபரங்களை வழங்குமாறு அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைக் கேட்டுக்கொண்டார்.

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி. சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார். இவரின் உரைக்கு குறுக்கீடு செய்து பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யுத்தத்தினால் உடலில் ஷெல் துண்டுகள், தோட்டாக்களின் பாகங்கள் என்பவற்றுடன் பல மாணவர்கள் இருப்பதாகவும் இவற்றை அகற்ற சிகிச்சை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதற்குக் குறுக்கீடு செய்த பிரதி அமைச்சர் அவ்வாறான மாணவர்களின் விபரங்களை வழங்குமாறும் அவர்களின் உடலிலுள்ள தோட்டாக்கள் மற்றும் ஷெல் துண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சிவசக்தி ஆனந்தன் எம். பி. தனதுரையில் கூறியதாவது:- இடம்பெயர்ந்த மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தினால் உழவு இயந்திரங்களை இழந்த மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர் இழந்தவர்களுக்கான நஷ்டஈடு பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லெண்ணம் காட்டப்படவில்லை. செல் வீச்சினால் பாதிக்கப்பட்டு உடலில் செல் துண்டுகள் உள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாது அவஸ்தைப் படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை தர அரச அதிகாரிகள் பயப்படுகின்றனர். யுத்தத்தினால் எத்தனை பேர் இறந்துள்ளனர், காயமடைந்துள்ளனர். எத்தனை மாணவர்களின் உடல்களில் சன்னங்கள் உள்ளன. போன்ற விபரங்களைத் திரட்ட வேண்டும் எனவும் கோருகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment