Saturday, November 26, 2011சென்னை : குமரிக் கடல் பகுதியில் நேற்று புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் இதுவரை 4 முறை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக, ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்தது.
கடந்த வாரம் முழுவதும் மழை நின்று வெயில் கொளுத்தியது. அக்டோபர் 22ம் தேதிக்கு பிறகு சரியாக நவம்பர் 22ம் தேதியன்று நான்காவது முறையாக வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக திருவாடனையில் 200 மிமீ மழை பெய்துள்ளது. முத்துப்பேட்டை, கொள்ளிடம் 170 மிமீ, காட்டுமன்னார் கோவில் 160 மிமீ, மரக்காணம், பட்டுக்கோட்டை 150 மிமீ, சிதம்பரம்,
பரங்கிப்பேட்டை, கடலூர், திருத்துறைப்பூண்டி 140 மிமீ, பேராவூரணி 130 மிமீ, தொண்டி, சேத்தியாதோப்பு, திருவாரூர் 11 மிமீ, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை விமான நிலையம், காரைக்கால், நன்னிலம், மணல்மேல்குடி 100 மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம், விருத்தாசலம், பண்ருட்டி, நீடாமங்கலம், நாகப்பட்டினம் 90 மிமீ, உளுந்தூர்பேட்டை, மதுக்கூர், மன்னார்குடி, வேதாரண்யம், தேவக்கோட்டை 80 மிமீ, சென்னை, தாம்பரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கொடவாசல், சீர்காழி, ஆலங்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், இளையாங்குடி 70 மிமீ மழை பெய்துள்ளது.
இதுதவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை வெளுத்துவாங்கியது. நேற்று முன்தினம் இரவில் இருந்தே கனமழை பெய்யத் தொடங்கியதால், 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும் வலுவடைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக நேற்று குமரிக் கடல் பகுதியில் புதியதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். அப்போது, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இருப்பதால், அந்த கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* குமரிக் கடலில் புயல் சின்னம்
* 55 கி.மீ வேகத்தில் வீசும் காற்று
* 13 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments:
Post a Comment