Thursday, November 24, 2011பெங்களூர் : சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடந்து வந்த விசாரணை நேற்றுடன் முடிந்தது. ரூ.66 கோடி சொத்து வழக்கு விசாரணை 6 ஆண்டுகளாக பெங்களுரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 252 சாட்சிகளின் அடிப்படையில் 1384 கேள்விகள் தயார் செய்யப்பட்டது. இதில் 1339 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். கடந்த மாதம் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி நடந்த விசாரணையில் அவரிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டது.
அதன் பின்னர் நேற்று முன்தினம் அவர் மீண்டும் ஆஜரானார். 580 கேள்விகளுக்கு பதிலளித்தார். நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். காலை 11 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை கூட இல்லாமல் தொடர்ந்து மதியம் 2.30 வரை விசாரணை நடந்தது. மீதமுள்ள 192 கேள்விகளும் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதட்டமில்லாமல் பதிலளித்தார். ஒரு சில கேள்விகளுக்கு பதட்டத்துடன் பதிலளித்தார்.
பின், வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
ஆங்கிலம் தெரியாது : விசாரணை முடியும்போது சசிகலா தரப்பு மூத்த வக்கீல் சந்தானகோபாலன், சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்றார். இதைக் கேட்ட நீதிபதி விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்றார். அமைச்சர்கள் முகாம்: ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 24 அமைச்சர்கள் பெங்களூர் வந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காரை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால் பொடி நடையாக நீதிமன்றத்துக்கு சென்றார்.
கோபப்பட்ட நீதிபதி: வழக்கின் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இளவரசி நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி, விசாரணைக்கு இளவரசி ஆஜராக வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டேன். ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. அடுத்த வாய்தாவுக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
நடிப்பதற்காக கொடுத்த புடவைகள்
விசாரணை முடிந்ததும், ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அதில் 1991 முதல் 1996வரை நான் சிறப்பாக ஆட்சி நடத்தினேன். பின்னர் வந்த திமுக அரசு பழிவாங்கும் நோக்கில் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. பதவியில் இருந்தபோது எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டை மட்டுமே வாங்கினேன். அந்த சொத்துக்கான ஆவணங்கள் உள்ளன.
என் வீட்டில் சேலைகள், வாட்ச்சுகள் பறிமுதல் செய்ததாக சொல்கிறார்கள். நான் ஒரு பேமஸ் நடிகையாக இருந்தவள். 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்காக சேலை, செருப்புகள் உள்ளிட்ட காஸ்ட்யூம் கொடுப்பார்கள். அவற்றை என்னிடமே அவர்கள் கொடுத்து விடுவார்கள். அவற்றை நினைவாக வீட்டில் வைத்திருந்தேன். அவற்றை எனது சொத்து மதிப்பாக சேர்த்துள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment