Tuesday, November 15, 2011

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-ஜெயலலிதா!

Tuesday, November 15, 2011
சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னை கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

போலீஸ் படை என்பது மாநில அதிகாரத்தின் கண்கூடாக தெரிகிற ஓர் அடையாளம் ஆகும். நமது கூட்டு முயற்சியால், போலீசாரின் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அமைதியான, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தருவதே நமது முக்கியமான நோக்கமாகும். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நீங்கள் சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து பலரது வீடுகளில் அமைதியை நிலைநாட்டியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பயணத்தின்போது திருமங்கலம் அருகே வைக்கப்பட்டிருந்த குழாய் வெடிகுண்டுகளை உரிய நேரத்தில் கண்டறிந்ததன் மூலம் பேராபத்து தடுக்கப்பட்டது. அதனால் எனக்கு நிம்மதி கிடைத்ததை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். மோசமான குற்றவாளிகளும், ரவுடிகளும் இன்னும் பெருமளவில் இருக்கிறார்கள். இந்த அச்சுறுத்தலை தடுத்தாக வேண்டும். வயதான பெண்களை கொலை செய்வது, குழந்தைகளை கடத்திச் செல்வது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பெண்கள் தொடர்பான குற்றங்கள் அறவே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

சங்கிலி பறிப்பு, வணிக நிறுவனங்களை உடைத்து கொள்ளையடித்தல், பிற துணிகர கொள்ளைச் சம்பவங்கள் சென்னை மாநகரில் பெருமளவில் நடக்கின்றன. உறுதியான நடவடிக்கை மூலம் இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

பின்னர் மாநாட்டு நிறைவுரை ஆற்றியபோது முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாடு, நிர்வாகத்திலும், வளர்ச்சியிலும் எப்போதும் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்பது எனது ஆசை. சட்டம்-ஒழுங்கு உரிய முறையில் பராமரிக்கப்பட்டால்தான் இது சாத்தியம் ஆகும். நான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மக்களின் பாதுகாப்பும், அமைதியை நிலை நாட்டுவதும்தான் எனது முக்கிய இலக்காக இருந்திருக்கிறது. ரவுடிகள் ஒழிப்பு, சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகளை ஒடுக்குவது மிகவும் அவசியம். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியில் நில அபகரிப்பு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முக்கியமானதாகும். ஏராளமான நில அபகரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அபகரித்த நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நில அபகரிப்பு வழக்குகளில் முழுமையான ஆதாரங்களை திரட்டி, கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டிய மிகவும் முக்கியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நில அபகரிப்பாளர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இந்த வழக்குகளின் இறுதி வெற்றியாக அமையும். இந்த வழக்கை கையாளும்போது போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களைக் கொண்டு நில அபகரிப்பு போன்றவை குறித்து பதிவுத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் அந்த போலி ஆவணங்களையும், கிரயப்பத்திரங்களையும் ரத்து செய்ய முடியும். சாதி, வகுப்புவாத சண்டைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைïறு ஏற்படும். ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கப்படும். பதற்றமான பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அது மேலும் பரவிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இடதுசாரி தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதிகளால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் நக்சலைட் தீவிரவாதம் இல்லை என்பதற்காக நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. தமிழகத்தின் மலைப்பகுதி, வனப்பகுதி குறிப்பாக எல்லையோரங்களில் இடதுசாரி தீவிரவாத்தால் ஆபத்து அபாயம் இருப்பதால் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். மத அடிப்படைவாதத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்பு அதுபோல செயல்களில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பற்றி கண்காணிப்பு அவசியம். வெடிபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை பெயருக்கு சோதனை செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் சோதனை செய்ய வேண்டும்.

ஏதாவது வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துவிட்டு அத்தோடு அதனை முடித்துவிடக்கூடாது. அந்த வெடிமருந்து எங்கிருந்து வந்தது? அவர் எங்கிருந்து வாங்கினார்? என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் அது தவறாகப் பயன்படுத்த காரணமாக இருந்த லெசென்சுதாரர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உணர வேண்டும். சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்சாலை ரோந்துப் பணித்திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதுமட்டுமல்லாமல், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், அவசர விபத்து நிவாரண மையங்களையும் தொடங்கினேன். சாலை விபத்துகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் வடிப்பது குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், சாராய கடத்தல் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதை கண்காணித்து தடுக்க வேண்டும்.

இன்னும் கூடுதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்று இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு செயல்பட்டு வந்த நடமாடும் கவுன்சிலிங் சென்டர் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு போலீஸ்காரரின் நலனிலும் எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. நான் ஆட்சிக்கு வந்த மே மாதம் முதல் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறேன்.

குறிப்பாக போலீசாருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீசாருக்கான இரவு பணிப்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பட்டாலியன்களிலும், வெளிநோயாளிகள் பிரிவுடன் மருத்துவமனை தொடங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை நகர போலீசுக்கான உணவுப்படி, இடர்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment