Friday, November 25, 2011சென்னை : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஆசாமி, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் கேத்கே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். கோவை கோத்தனூரை சேர்ந்த கலீல் ரகுமான் (38) பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் தமிழக உளவுப் பிரிவு போலீசாரால், 2007ல் இருந்து தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. கலீல் ரகுமான் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் தனி அறையில் தீவிர விசாரணை நடத்தினர்.
கலீல் ரகுமான் கூறுகையில், ’’1998ல் நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) என்னை கைது செய்து விசாரணை கைதியாக, சிறையில் அடைத்தது உண்மை. நான் 3 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 2006ல் என் மீதான வழக்கு தள்ளுபடியானது. எனவே, என்னை தேட போடப்பட்டுள்ள இந்த தாக்கீது, ஏற்கெனவே போட்ட பழைய தாக்கீதாக இருக்கலாம்’’ என்றார். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.
விமான நிலைய அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கலீல் ரகுமான் மீதான வழக்கு தள்ளுபடியானது உண்மை. ஆனாலும், இதுபோன்ற வழக்கில் சிக்கியவர்கள் 5 ஆண்டுகள் வெளிநாடு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி, 2007ல் கலீல்ரகுமான் துபாய் சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்த உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், கலீல் ரகுமான் மீது தேடுதல் தாக்கீது கொடுத்துள்ளனர்.
மேலும் கலீல் ரகுமான் வழக்கை மறைத்து, புதிய பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு சென்றதும் தெரியவந்தது. எனவே, அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சரிதான் என்று உளவுத்துறை போலீசார் கூறினர். இதையடுத்து கலீல் ரகுமான் மீது பாஸ்போர்ட் சட்ட விதியின் கீழ் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment