Tuesday, November 29, 2011இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யசூசி அகாஸி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது யசூசி அகாஸி, “பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இலங்கை துரித வளர்ச்சி அடைந்திருப்பதையிட்டு ஜப்பான் பெரிதும் திருப்தி அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டார். தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ் சாலையை திறந்து வைக்கும் தேசிய வைபவத்தில் யசூசி அக்காஸி அடங்கலான ஜப்பான் நாட்டு தூதுக்குழுவும் பங்கு பற்றியது.
“இந்த அதிவேக நெடுஞ்சாலை இந் நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங் களிப்பு செய்யும். எனினும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி, ஒத்துழைப்பு நல்கும்” என்றும் யசூசி அக்காஸி கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், “இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் அளித்துவரும் ஒத்துழைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன், ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதேநேரம், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அக்காஸிக்கு எடுத்துக் கூறினார். அத்தோடு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார்.
அண்மையில் ஜப்பான் நாட்டை சுனாமி அனர்த்தம் தாக்கிய போது ஜப்பான் அளித்த உதவி, ஒத்துழைப்புகளை நினைவு கூர்ந்ததுடன் ஜப்பான் அரசாங்கத்தின் நன்றிகளையும் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுகிதோ ஹொபோ, ஜப் பானுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தார்கள்.
No comments:
Post a Comment