Tuesday, November 29, 2011

இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்-திஸ்ஸ விதாரண

Tuesday, November 29, 2011
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் தெரிவித்த அமைச்சர், இதன் மூலமே தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பிரிவினைவாத சக்திகளை தமிழ் மக்கள் நிராகரிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; 2033ம் ஆண்டளவில் உலகில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதனைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்றன.

இதன் ஒரு அம்சமாக பல்வேறு நாடுகளிலும் உள்நாட்டு யுத்தங்களை உருவாக்கி அதன் மூலம் இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் எமது நாடும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே எமது நாட்டை இத்தகைய சிக்கல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எமது பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்கான திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். அதற்கு நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு என்பன சாத்தியமாகும்.

நாம் அபிவிருத்தி பற்றி சிந்திக்கும்போது சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. நிர்வாகத்துறை, தேர்தல் முறைமை மற்று சட்டவாக்கம் போன்றவற்றிலேயே அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை வடக்கின் அபிவிருத்தி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது இனப் பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழு பற்றி பேசப்படுகின்றது.

இந்த தெரிவுக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு அத னூடாக தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை விரைவாகப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். வரிச் சுமைகள் அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே எமது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment