Thursday, November 17, 2011

இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல்!

Thursday, November 17, 2011
மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவும் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். முதன்முறையாக மீனவர்கள் மீது சாக்கடை கலந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான்கு விசைப்படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது கற்கள் மற்றும் உருட்டுகட்டைகளை வீசி தாக்கினர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு என்ற மீனவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பயந்துபோன மீனவர்கள், படகுகளை கரைக்கு திருப்பினர்.
அவர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர், 10க்கும் அதிகமான படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். அதிவேக விசைப்படகில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து மீனவர்களின் படகுகளை மூழ்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது சாக்கடை கழிவுநீர். இதனால் கடல் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. வலைகள் அறுக்கப்பட்டதால் மீன்பிடிக்க முடியாமல் வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

இதுகுறித்து தாக்குதலில் காயமடைந்த மீனவர் சேசு மற்றும் மீனவர்கள் கூறுகையில், நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் விரைவு படகில் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது புது டெக்னிக்காக, சாக்கடை கழிவு நீரை எங்கள் மீது பீய்ச்சி அடித்தனர். இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இனிமேல் மீன்பிடிக்க கடலுக்குள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்’’ என்றனர்.

No comments:

Post a Comment