Monday, November 7, 2011

ஜனாதிபதித் தேர்தலின் போது அதிக சலுகைகளைப் பெறுவதில் சம்பந்தன் ஆர்வம் காட்டினார்-விக்கிலீக்ஸ்!

Monday, November 07, 2011
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூடுதலான சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவினை யாருக்கு வழங்குவது என்பதனை நிர்ணயிக்கும் பிரதான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா அல்லது சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதா என்பதனை சம்பந்தன் உடனடியாக தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரிடமிருந்து கூடுதலான சலுகைகளை பெற்றுக் கொள்வதில் சம்பந்தன் கூடுதல் நாட்டம் காட்டினார்.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சில தமிழ் தரப்புக்கள் சம்பந்தனிடம் கோரிய போதிலும் அது பயனற்ற முயற்சி என நிராகரித்துள்ளார்.

சில லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனை தவிர வேறு எதனையும் சாதிக்க முடியாது என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் ஆதரவினை சரத் பொன்சேகாவிற்கா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கா அளிப்பது என்பது தொடர்பில் துரித தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment