Saturday, November 26, 2011சென்னை: தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
வங்காள விரிகுடா பகுதியில் தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய (தமிழக) மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருப்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இதற்கு இந்திய கடலோர காவல்படை பதில் அளித்து மனுதாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக மீனவர்கள், இந்தியா, இலங்கை சர்வதேச எல் லையை தாண்டிச் சென்று மீன் பிடிக்கின்றனர். நாட்டில் தடை செய்யப்பட்ட வலைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தியா- இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 5 கடல் மைல் தூரத்துக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கும் வகையில் அந்த பகுதியை தமிழக அரசு `மீன்பிடி தடை பகுதி'யாக அறிவிக்க வேண்டும். இதை மீறும் மீனவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் இந்த மனுவையும், அதன் நிலைப்பாட்டையும் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மீனவர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலையை விளக்கி 14-6-2011-ல் டெல்லியில் தங்களிடம் நான் அளித்த விளக்க அறிக்கையை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்காளவிரிகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் பரம்பரையாக பூகோள அல்லது அரசியல் எல்லைகள் இன்றி மின்பிடித்து வருகின்றனர்.
இலங்கை, இந்திய அதிகாரிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பரம் ஒப்புதலின் பேரில் இருநாட்டு மீன வர்களும் மற்றவர்களின் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியும்.
நிலவரம் இப்படி இருக்கையில், இந்திய கடலோர காவல் படை எடுத்துள்ள நிலை உண்மையில் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த நிலைப்பாடு செயல்படுத்தப்படுமானால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அவர்கள் பட்டினியில் வாட வழிவகுக்கும். மத்திய அரசு இதை செயல்படுத்தாது என்று நம்புகிறேன். எனவே கடலோர காவல் படையின் நிலையை திருத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்விஷயத்தில் கோர்ட்டு ஒரு முடிவை அறிவிக்கும் முன்பு இதைச் செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment