Monday, November 28, 2011

இலங்கையில் தயாரிக்கப்பட்ட போலி கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் கொள்ளை:கொள்ளையடித்த கும்பலை மதுரையில் போலீசார் கைது செய்தனர்!

Monday, November 28, 2011
மதுரை: இலங்கையில் தயாரிக்கப்பட்ட போலி கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை மதுரையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஏடிஎம்மை குறி வைத்து ஒரு கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. மதுரையில் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு மதுரை சின்னசொக்கிகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ஒருவர் சந்தேகப்படும்படி செயல்பட்டுள்ளார். கார்டில் உள்ள அடையாள எண்களை சுரண்டியபடி இருந்ததை அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்த தல்லாகுளம் எஸ்ஐ லோகேஸ்வரி பார்த்தார். உடனே சுதாரித்த அவர் ஏடிஎம்மில் இருந்தவரை பிடித்து தல்லாகுளம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த நபர் தனது பையில் மறைத்து வைத்திருந்த 20 ஏடிஎம் கார்டுகளை ரோட்டில் வீசினார். அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த கார்டுகளையும் எடுத்துச் சென்று ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.
பிடிபட்டவர் சென்னை ஆலந்தூர் பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த கணபதி(33) என தெரிந்தது. அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
ரகசிய எண்ணுடன் கூடிய போலி ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தங்களுக்கு இலங்கையில் செயல்படும் ஒரு கும்பல் மூலம் வந்துவிடும் என்றும், அவற்றை வைத்தே மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் கணேசன் தெரிவித்தார். இதற்காக நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாகவும் கணேசன் கூறினார்.
ஒரு கும்பலாக முக்கிய ஊர்களுக்கு செல்லும் அவர்கள் தனித்தனியாக பிரிந்து கொள்ளையடித்து விட்டு ஒரு இடத்தில் ஒன்று கூடி கார்களில் தப்பி செல்வதாகவும், போலீசாரை திசை திருப்ப குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு கார்களில் மாறி மாறி பயணிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது 3 பேர் கொண்ட கும்பல் மதுரையில் ஒரு காரில் சுற்றி வருவதாகவும், அவர்கள் ஏடிஎம்களில் கொள்ளையடித்த 40 லட்சம் பணத்துடன் இன்று தப்பி செல்ல உள்ளதாகவும் இதற்காக காலை ரிங் ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் பகுதியில் அனைவரும் ஒன்று கூட உள்ளதாகவும் கணேசன் கூறினார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் ரிங்ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் அருகே இன்று காலை 9 மணிக்கு காத்திருந்தனர். போலீஸ் வாகனங்களை ஒதுக்குப்புறத்தில் நிறுத்திவிட்டு துப்பாக்கியுடன் மப்டி உடையில் போலீசார் காத்திருந்தனர்.
காலை 10 மணியளவில் ஒரு அம்பாசிடர் கார் ரிங்ரோடு : சிவகங்கை ரோடு சந்திப்பில் இருந்த டீ கடை அருகே நின்றது. அதிலிருந்து 3 பேர் இறங்கினர். சில நிமிடங்களில் இன்டிகா கார் ஒன்று அங்கு வந்து நின்றது. அம்பாசிடர் காரிலிருந்து இறங்கிய 3 பேரும் இண்டிகா காரில் ஏறினர். அத்துடன் பெரிய பார்சல்களையும் இண்டிகா காரில் ஏற்றினர்.
இதைக்கண்டதும் அவர்கள் ஏடிஎம் மோசடி கும்பல் என்பதை உறுதிப்படுத்திய போலீசார் உடனே கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். கார் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஏடிஎம்மில் கொள்ளையடித்தவர்கள் இலங்கையை சேர்ந்த ஆன்டனி ஆனந்தன், பிரகாஷ், சையது அபுதாகிர், விஜயகுமார் என தெரிய வந்தது. இதில் ஒருவர் டிரைவாக செயல்பட்டுள்ளார். அவர்கள் 7 மூட்டைகளில் வைத்திருந்த ரூ. 40 லட்சம், 80 ஏடிஎம் கார்டுகள் சிக்கின. அவர்கள் பயன்படுத்திய டிஎன் 63யு 2629 எண்ணுள்ள அம்பாசிடர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment