Monday, November 28, 2011லண்டன் : வன்முறைகளை கைவிட்டால் தலிபான் தீவிரவாதிகளுக்கு மாதந்தோறும் ரூ.8,000நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் மீதான படுகொலை வழக்குகள் அனைத்திலும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உதவி படை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. மதக் கொள்கைகளை கடைபிடிக்காதவர்களை தலிபான் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று வருகின்றனர். மேலும், அமெரிக்க, இங்கிலாந்து வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், வன்முறையை கைவிட்டுவிட்டால் தலிபான்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும். இங்கிலாந்து வீரர்களை கொன்ற வழக்கில் பொது மன்னிப்பும் வழங்கப்படும் என்று காபூலில் உள்ள சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உதவி படை மேஜர் ஜெனரல் டேவிட் ஹூக் நேற்று அறிவித்தார். இதுகுறித்து டேவிட் கூறுகையில்,இந்த திட்டத்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இங்கிலாந்து வீரர்களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது கடினம்தான். ஆனால், அமைதி ஏற்பட வேண்டும் என்றால் இதை தவிர வேறு வழியில்லை என்றார்.
வன்முறையை கைவிட்டு அமைதி திட்டத்துக்கு முன்வரும் தலிபான்களிடம் விசாரணை நடத்த மாட்டோம். அதற்கு பதில், தீவிரவாத பாதைக்கு சென்றதற்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை 2,700 தலிபான்கள் தேசிய ஒருங்கிணைப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்று டேவிட் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆப்கனில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment