Thursday, November 24, 2011

சிறார் கடத்தல் குறித்து அவதானம் - அனோமா!

Thursday, November 24, 2011
மொரட்டுவ – ராவத்தாவத்தை பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறார் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குற்ற விசாரணை திணைக்களமும் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் அனோமா திசாநாயக்க எமது செய்திச் சேவைக்கு தகவல் தருகையில், தாம் இதுகுறித்து நேற்று காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த விசாரணையை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு காவல்துறை மா அதிபர் இணங்கியதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரசபையின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும், அங்குள்ள அனைத்து ஆவணங்களையும், தமது பொறுப்பிற்கு கையேற்றுள்ளதாகவும், அனோமா திசாநாயக்க குறிப்பிட்டார்.

ராவத்தாவத்தையில் உள்ள குறித்த சிறுவர் இல்லம் தொடர்பில் 1929 சிறார் பாதுகாப்பு அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறார் இல்லத்தில் உள்ள சிறார்களை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று அங்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, சிறார் இல்லத்தில் 45 சிறார்கள் உத்தியோகபூர்வமான பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், மேலும் 70 சிறார்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

சிறப்புத் தேவையுடைய சிறார்களும் இதன்போது மோசடிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, கர்ப்பிணித்தாய்மார்கள் மகப்பேற்றை எதிர்நோக்கும் வரை காத்திருந்து குழந்தை பிறந்தததும், அதனையும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்திற்கு எதிராக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட தருணத்திலும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அண்மைய தினங்களில் குழந்தைகளை பிரசவித்த பெண்கள் சிலரும் அந்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment