Thursday, November 24, 2011கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும் ஒருபோதும் தயங்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்நாட்டு சட்டவரைமுறைகளுக்கு அமைவாக நாம் நடவடிக்கை எடுப்போம். எந்தவொரு வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிபணிந்து நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், போரின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதாகவும் விரைவில் அந்த எண்ணிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள் வடக்கில் குடிசன மதிப்பீட்டை செய்துவருகின்றனர்.
அத்துடன் யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களையும் அவர்கள் திரட்டிவருகின்றனர். அந்த எண்ணிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம்.
அது, சில வெளிநாட்டுச் சக்திகள் கூறுவதுபோல அதிகூடிய எண்ணிக்கையாக அமையாது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment