Friday, November 25, 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Friday, November 25, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதி என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணையின் இறுதியில் சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க உயர் இராஜதந்திரி ஒருவருக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் பெரும்பான்மையான இலங்கையர்கள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என அமெரிக்க ராஜதந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னிப்பு வழங்கப்படாத பட்சத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சரத் பொன்சேகா விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனா பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்திருந்ததாகவும், இறுதி நேரத்தில் தூதரக அதிகாரி ஒருவர் இந்தப் பேச்சுவார்தையில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை என அமெரிக்க தூதரக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்களின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண வாழ் கடும்போக்குடையவர்களும் கூட்டமைப்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடும்போக்குவாதிகள் அல்ல எனவும் தீவிரவாதிகள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment