Thursday, November 24, 2011

கூடங்குளம் அணு உலை போராட்டம் நாட்டுக்கு எதிரானது!

Thursday, November 24, 2011
சென்னை: இந்தியா ஒரு வளரும் நாடு. நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அடித்தளம். இன்று இந்தியா, உலகில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வல்லமை பெற்று விளங்குவது, நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியான சூழ்நிலை, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வலுவான ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி போன்றவை தேவைப்படுகின்றன.இந்திய அணுசக்தித் துறையை நேரு, 1953ல் உருவாக்கி, அதன் தலைவராக டாக்டர் ஹோமிபாபாவை நியமித்தார். இந்தியாவின் முதல் அணு உலை, "சைரஸ்' 1960ல் ஆரம்பிக்கப்பட்டு, பின் கல்பாக்கம், தாராப்பூர், ராஜஸ்தான் என விரைந்து, இன்று 22 அணு உலைகள், நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகள் அனைத்திலும், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும், மற்றவர்களும், கடந்த 40 ஆண்டு காலமாக, தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் தங்கள் குடும்பங்களுடன், உலையின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விஞ்ஞானிகள் ஒரு நாட்டின் முதுகெலும்பு, விஞ்ஞானம் இன்று மக்களின் அன்றாட தேவைகளிலிருந்து, விண்வெளியில் கூடம் அமைத்து ஆய்வு செய்யவும், மாற்று கிரகங்களில் அடியெடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அதில் வீடுகட்ட எத்தனிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்தியாவில் அமைக்கப்பட்ட அணு உலைகள், 40, 50 ஆண்டுகள் ஆகியும், அங்கு பணிபுரிபவர்களுக்கோ அல்லது அருகில் வசிப்பவர்களுக்கோ, இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.
கூடங்குளம் அணு உலை, விஞ்ஞானிகளால் அறிவுப்பூர்வமாக ஆராயப்பட்டு தரமானதாக, நான்கடுக்கு பாதுகாப்புடன், பூகம்பம், சுனாமி, புயல், விமானத் தாக்குதல் போன்ற எந்த வகை அச்சுறுத்தல் வந்தாலும், தாங்கி நிற்பதாகவும், மீறி ஏதேனும் அசம்பாவிதம் வந்தால் உடனடியாக, தானாகவே செயல் இழக்கும் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணு உலை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் தராது; கடல் வாழ் மீன்களுக்கு எவ்வித கெடுதலும் ஏற்படுத்தாது; மக்களுக்கும் இடையூறு தராது. பின், ஏன் இந்த போராட்டம்? கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்கக் கூடாது; அதன் மூலம் தமிழகம் வளர்ந்துவிடக் கூடாது என்று, ஒரு சிலர் மக்களை திசை திருப்பி, அவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைத்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம், வளர்ச்சிக்கான போராட்டம் அல்ல; அழிவுப்பாதைக்கான போராட்டம்.இந்தியா வல்லரசாக வேண்டும். <உலக அரங்கில் உன்னத இடத்திற்கு வரவேண்டுமென்று கனவு கண்ட, அப்துல் கலாம் போன்றவர்களை கொச்சைப்படுத்தும் அளவுக்கு, போராட்டக் குழு எனக் கூறிக் கொண்டு, ஒரு சிலர். நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதை. அனைத்து மக்களும் அறிவார்கள்.

போராட்டம் ஆரம்பித்த உடனேயே, கிறிஸ்தவ அமைப்புகளும், பேராயர்களும் துணை போகிறார்கள் என்று அறிந்தவுடன், பலமுறை டில்லி சென்று இந்திய கத்தோலிக்க பேராயர்கள் (சி.பி.சி.ஐ.,) அமைப்பிடம், பேராயர்களையும், பங்குத் தந்தைகளையும் இந்த போராட்டத்திலிருந்து விலக்குமாறு வலியுறுத்தினேன்.மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் அணுமின் கழக தலைவர், சி.பி.சி.ஐ., தலைவர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து, கூடங்குளம் குறித்த அச்சத்தைப் போக்க விரிவாக விவாதிக்க ஏற்பாடு செய்தேன். மேலும், பிரதமர் மன்மோகன் சிங், சி.பி.சி.ஐ., தலைவர் கர்தினால், ஆஸ்வல்ட், கிரேசியஸ் அவர்களை சந்திக்க விரும்பியதும், அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.

இந்த சந்திப்பில், கர்தினால் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் கல்வி மற்றும் மருத்துவ துறையில் செய்கிற சேவையை சுட்டிக்காட்டியதோடு, ஒரு போதும் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய, மக்களுக்கு இன்றியமையாததான மின் உற்பத்திக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்று, பிரதமருக்கு உறுதி கூறினார். அதன் பின் கர்தினால், போராட்டத்திற்கு பேராயர்களோ, பங்குத் தந்தைகளோ, ஆதரவு தரவோ, பங்களிக்கவோ கூடாது என வேண்டுகோள் விடுத்தார். அதை, பேராயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த சந்திப்பில், ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலுக்கு, கிறிஸ்தவர்கள் பலிகடா ஆகமாட்டார்கள் என்று, மீண்டும் உறுதி கூறினார். எனவே, நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட கிறிஸ்தவ மக்களும், சபையும், ஒரு போதும் இப்படிப்பட்ட நபர்கள் பின்னால் செல்ல வேண்டாம்.போராட்டக்காரர்கள் கோரிக்கை வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆரம்பித்த போராட்டம், இந்தியாவின் தலைசிறந்த நடுநிலை விஞ்ஞானிகள் முத்துநாயகம் தலைமையில் உலக தரம் வாய்ந்த, எந்த ஆபத்துமற்ற, கதிர்வீச்சு ஏற்படாத தரம் வாய்ந்த மின் உலை என்று ஆராய்ந்து கூறிய பிறகும், அவர்கள் இதை ஏற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது, ஏன் என்று தெரியவில்லை. 50 கேள்விகளில் பல கேள்விகள் பாதுகாப்புக்கும் தொடர்பில்லாதவை. ரகசியமாக வைக்கப்பட வேண்டியவை.

வரைபடம் வேண்டும், ஒப்பந்த நகல் வேண்டும் என்பன போன்ற கேள்விகள், ஏதோ வெளிநாட்டு சக்திகள் அவர்களை இயக்குவதை உறுதிப்படுத்துகின்றன.எனவே, கூடங்குளம் பகுதி வாழ்மக்கள், அச்சம் தவிர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முன்வர வேண்டும்.-ஜி.கே.தாஸ், மாநில காங்., பொதுச்செயலர்.

No comments:

Post a Comment