Thursday, November 17, 2011

இலங்கை கடற்படையில் உள்ள ரவுடி சக்திகளை கட்டுப்படுத்தி வைக்குமாறு இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Thursday, November 17, 2011
சென்னை: இலங்கை கடற்படையில் உள்ள ரவுடி சக்திகளை கட்டுப்படுத்தி வைக்குமாறு, இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் குறித்து ஏற்கனவே, கடந்த ஜூன் 7, 21, அக்டோபர் 10, நவம்பர் 7ம் தேதிகளில் கடிதம் எழுதியுள்ளேன். இதுபோன்ற தாக்குதல்களை இந்தியா மீதான தாக்குதலாக கருதி, தேசிய விவகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருந்தேன்.நான் கடிதங்கள் எழுதியும், இவ்விஷயத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அவர்கள் இது தொடர்பாக உறுதி மொழிகள் அளித்தும், நம் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது.

கடந்த, 15ம் தேதி நடந்த சம்பவத்தில், கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லைக் கோடு பகுதியில், இலங்கை கடற்படையினர், இந்திய மீன்பிடி படகுகள் மீது நடத்திய தாக்குதலில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதிவேக ரோந்து படகில் வந்த, இலங்கை கடற்படையினர், 15 பேர், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். அதில், செல்வராஜ் என்ற மீனவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம், ராமேஸ்வரம் மீனவர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற தன்மையை மீனவர் சமுதாயத்தினரிடையே இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தும், இதுபோன்ற தாக்குதலை, இந்திய அரசால் தடுக்க முடியவில்லை.

இலங்கை அரசின் இரட்டை வேடத்தை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தேன். பல தலைமுறைகளாக பாக் ஜலசந்தி பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித்து வரும், அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையில் உள்ள ரவுடிகளை கட்டுப்படுத்துமாறு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment