Thursday, November 17, 2011மதுரை : இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, இந்திய கப்பல்படை மற்றும் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காக்கக்கோரி, வக்கீல் ஸ்டாலின் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும், தமிழக மீனவர்களை இலங்கை கப்பல்படை தாக்குதலில் இருந்து பாதுகாக்க கடற்படை, கடலோர காவல்படை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, கடலோர காவல்படை உதவி இயக்குனர் ஜெனரல் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று, நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடலோர காவல்படை சார்பில், மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இந்திய கடல் எல்லையை தாண்டும் போது, தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை தடுக்க முடியாது. எல்லை தாண்டாமல் இந்திய கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும், என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னர், 13 முறை தாக்குதல் நடந்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், எல்லை தாண்டி செல்வதை குறிக்கும் படம் ஒன்றை இணைத்துள்ளனர். அந்தப்படத்தில் உள்ள படகில், இலங்கையின் தேசிய விலங்கான சிங்கத்தின் உருவம் இடம் பெற்றுள்ளது. மாறாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குறிப்பிட்டுள்ளனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடற்படை, கடலோர காவல்படை இணைந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment