Tuesday, November 1, 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!

Tuesday, November 01, 2011
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் புது வகையான தாக்குதலில் இறங்கி உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்களின் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தும், கல்வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது, அவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் பலர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு இலங்கையை கண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் புதுவித தாக்குதலை தொடங்கி உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் மீது கல்வீச்சு நடத்தியும், மரக்கட்டைகளால் தாக்கியும் விரட்டி அடித்துள்ளனர். மேலும், பைபர் படகுகளில் இருந்து அதிவேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க முயற்சி நடந்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 583 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். பிற்பகலில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டினர். அதன்பின், இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்தனர். நேற்றிரவு மீண்டும் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த போது, அங்கு பைபர் படகில் வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை சுற்றிவளைத்தனர். 20க்கும் அதிகமான படகுகளில் இருந்து இறால், நண்டு, கணவாய், வாவல், சீலா உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை பறித்தனர்.

பின்னர், தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். படகில் இருந்த வலைகளை அறுத்து வீசினர். அத்துடன் படகுகள் மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் இந்திய கடல் பகுதியில் கிடைத்த அதிக விலை கிடைக்காத சூறை மற்றும் காரல் மீன்களுடன் மீனவர்கள் பரிதாபமாக இன்று காலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மீனவர்கள் யாரும் மீன்துறையினரிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனினும் இதுதொடர்பாக தகவலறிந்த கியூ பிரிவு, மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார், மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment