Friday, November 25, 2011சென்னை : சென்னையில் பெய்து வரும் தொடர் மழையில் பெரும்பாலான சாலைகள் காணாமல் போயுள்ளன. அதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முறையாக மாநகர பஸ்களை பராமரிக்காததால் பஸ்களிலும் மழைநீர் ஒழுக பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கி விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. நேற்று இரவு முதல் தமிழகம் எங்கும் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடிய விடிய மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளமாக காட்சி அளிக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெஞ்சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. மழைநீரில் சாலைகள் அரித்து விட்டதால், வாகனங்கள் திக்குமுக்காடின.
நகரில் சாலைகள் மிக மோசமாக உள்ளதால், பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் பஞ்சராகி நின்றன. பலர் வாகனங்களை வீட்டிலேயே நிறுத்திவிட்டு ரயில்களில் பயணம் செய்தனர். இதனால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. பஸ் பணிமனை மற்றும் நிலையங்களில் மழைநீர் குட்டையாக தேங்கி இருந்தது. தி.நகர், வடபழனி, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, ஆவடி, திருவொற்றியூர் ஆகிய பஸ் நிலையங்களில் நீர் தேங்கி இருந்தது. அதுபோல் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நனைந்தபடியே தவித்தனர்.
பஸ்கள் பணிமனைகளில் இருந்து கொண்டு வரும்போதே, இருக்கைகள் நனைத்து ஈரமாகவே இருந்தன. இதனால் பயணிகள் இருக்கை இருந்தும் அமர முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதாலும், பராமரிப்பு சரியில்லாததால் கண்ணாடிகளை மூட முடியாமல் இருந்ததாலும் பஸ்களில் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் பயணிகள் பஸ்சிலும் நனைந்தபடியே செல்கின்றனர்.
No comments:
Post a Comment