Monday, November 7, 2011

நான் கிழக்கான் என்பதற்காக புலிகள் என்னைப் புறக்கணித்தார்கள்:கூட்டமைப்பினர் மட்டக்களப்பை புறக்கணித்துள்ளனர்-விநாயகமூர்த்தி முரளிதரன்!

Monday, November 07, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாமையைக் குறிப்பிடலாம்.

கிழக்கு என்ற ஒரு காரணத்திற்காக மட்டக்களப்பை இவர்கள் புறக்கணித்துள்ளனர். கிழக்கை இவர்கள் புறக்கணிப்பது இன்று மட்டுமல்ல, தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையாகும்.இராஜதுரையை புறக்கணித்தார்கள், புலிகள் நான் கிழக்கு என்பதற்காக என்னைப் புறக்கணித்தார்கள்.இவ்வாறு காலா காலமாக இவர்களின் கிழக்கு புறக்கணிப்பு இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு இவர்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கையின் மிகப் பெரிய இரண்டாவது குடிநீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் அண்மையில் வவுணதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் நான் புலிகள் இயக்கத்திலிருக்கும் போது இந்த உன்னிச்சை குடிநீர் திட்டத்திற்கு அதிகாரிகள் என்னிடம் அனுமதி கேட்டபோது அந்த அனுமதியினை எழுத்தில் எழுதிக் கொடுத்ததுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் அப்போது உன்னிச்சை பிரதேசம் இருந்தபோது அதிகாரிகளை அழைத்துச் சென்று அத்திட்டத்தைப் பார்வையிட்டேன்.

மக்களின் நன்மைக்காகவே நான் செயற்பட்டேன். கிழக்கு மாகாணத்தில் இன்று ஜனாதிபதியினால் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வரலாற்றில் என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்கம் பெருந்தொகையான பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment