Monday, November 7, 2011

7 ஆம் அறிவு ஏகப்பட்ட வெட்டுகளுக்கு பின் ரிலீஸ்?:-சபாஷ் சரியான போட்டி! சீமானுக்கு ஒரு வில்லன்!!

Monday, November 07, 2011
7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு நல்ல அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா. இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்தில் முக்கியமாக இலங்கையில் ஒ‌ன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய போரை எப்படி வீரம் என்று சொல்ல முடியும் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு இலங்கை சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சர்ச்சைக்கு‌ரிய இந்த வசனங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்நாட்டு அரசின் தணிக்கை குழு புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்தையும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்தையும் நீக்கிவிட்டதாக தெரிகிறது.

சபாஷ் சரியான போட்டி! சீமானுக்கு ஒரு வில்லன்!!
-எஸ்.எஸ்.குகநாதன்:-

தனது படங்களை இலங்கைக்கு இனி விற்கமாட்டேன் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அறிவித்திருக்கிறார்.இலங்கையில் தமிழ்ப்படங்களை வெளியிடுகின்றபோது அவற்றை இலங்கை அரசு தணிக்கை செய்வதாகவும், தமக்கு ஒப்பில்லாத விடயங்களை குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை வெட்டி எடுத்துவிட்டே வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டும் சசிகுமார். அதனால் இனி தனது படங்களை இலங்கையில் வெளியிட அனுமதிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருக்கிறார்.

ஒரு சுயாதீனமுள்ள நாடு தனது சட்டதிட்டங்களுக்கு அமைய திரைப்படங்களை வெளியிடவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறை அவர் கண்டிருப்பாரோ தெரியவில்லை.சிங்கப்பூரில் வெளியிடப்படும் தமிழ்ப்படங்களில் மிக கோரமான வன்முறைக்காட்சிகள் வெட்டி எடுக்கப்படுகின்றனவே, அதற்காக அவர் இனி சிங்கப்பூருக்கும் தனது படத்தை விற்காமல் விட்டுவிடப்போகிறார்.

தனது படத்தை தனது அனுமதியில்லாமல் வெட்டி எடுப்பதை பொறுக்கமுடியாமல் ஒரு கலைஞன் ஆத்திரப்படுவது நியாயமானதுதான். ஆனால் அது தொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு அறிவித்தபோது தெரிவித்த சில தகவல்கள்தான் நகைப்பிற்குரியவை.அவர் இவ்வாறு கூறுகிறார், “ஈழத்தில் மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கப்போறது இல்லை.

கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!´´ என்று கூறியுள்ளார்.

இந்த வசனங்களை யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் படிக்கின்றபோது எப்படிச் சிரிப்பார்கள் என்பதை மனக்கண்ணில் பார்க்க முடியவில்லை

கடந்த தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்களை யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகளில் எப்படி வெளியிட்டார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். வேலாயுதம் திரைப்படம் வெளியிட்ட செல்வா திரையரங்கு, யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நினைவுபடுத்தியது. அவ்வளவு அலங்காரங்கள். திரையரங்கு முன்னால் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், விஜய் கட்டவுட்டுக்கு கற்ப+ரம்காட்டி, தேங்காய் உடைத்து பாலாபிஷேகம் செய்து படத்தை வரவேற்றனர். படம் வெளிவந்து பல நாட்களாகியும் கவுஸ்புள் காட்சியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்;கின்றது. ஆனால் சசிக்குமார் நினைக்கிறார் ஈழத்தில் இருக்கும் மக்கள் படம் பார்க்கின்ற மனநிலையில் இல்லையாம். பாவம் அவர், யாழ்ப்பாணம் என்ன நிறம் என்று தெரியாதவர். அவரது இந்த தகவல் தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணம் வந்துசென்ற எனது தமிழக நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன். அவர் இயக்குனர் வசந்தபாலனின் நண்பர். வசந்தபாலன் மூலம் சசிக்குமாருக்கு யாழ்ப்பாண நிலைமைகளை சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார், இல்லை சேர், அவருக்கும் அங்குள்ள நிலைமைகள் தெரியாமலிருக்காது, ஆனால் இப்படியெல்லாம் கதைத்தால்தான் சினிமா இன்டஸ்ரியில் தானும் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளமுடியும் என்பதாலேயே அவர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்றார்.

அட, யாழ்ப்பாணத்தின் நிலைமைதான் தெரியாதென்றால் சிறிலங்காவின் பொருளாதார விடயங்களையாவது ஒரு இயக்குனர் என்ற வகையில் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையின் பொருளாதார ஆதாரமாம். சுற்றுலா சரி. சினிமா எப்போது இலங்கையின் பொருளாதார ஆதரமாகியது?. தன்னிடமுள்ள பல லட்சம் கோடி இலங்கை நாணயத்தாள்களை தான் சரணடையுமுன்னர், ஒன்றாக போட்டு தீயிட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவ்வாறு தீயிட்டு விட்டால் இலங்கையின் பொருளாதாரமே ஆட்டம்கண்டுவிடும் என்று நினைத்தவர் பிரபாகரன். இவரை தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டத்தில் உள்ளவர்தானே இந்த சசிகுமார். அவர் இப்படி கூறுவதில் வியப்பு ஏதும் இருக்கமுடியாதுதான்.

இது தொண்ணூறுகளில் நடந்த சம்பவம். அப்போது யாழ்ப்பாணம்; புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் இப்படியும் நடக்கிறது என்ற சிறிய பத்தி ஒன்றை எழுதிவந்தேன். அந்தப் பத்திக்கென்று ஒரு வாசகர் சிறிய குறிப்பு ஒன்றை எனக்கு எழுதியிருந்தார்.

புலிகள் யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் அது. யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் சென்ற அந்த வாசகர், வீட்டில் தமிழ்திரைப்படம் ஒன்றை டிவிடியில் பர்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது வீட்டிற்கு வந்த புலிகள் திரைப்படக் கொப்பியையும் டிவிடி பிளேயரையும் பறிமுதல் செய்துகொண்டு போனதுடன், 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தனராம். அந்தக் காலத்தில் தமிழக திரைப்படங்கள் ஈழப்போராட்டத்தை மழுங்கடிக்கின்றன என்று காரணம் கூறி புலிகள் அவற்றை தடைசெய்திருந்தனர். அவர் விடுமறை முடிந்து பிரான்ஸ் வந்ததும், புலிகள் நடாத்திய வீடியோ கடையில் அந்தப் படக்கொப்பியை எடுத்து மீதிப்படத்தைப் பார்த்து முடித்ததாக எழுதியிருந்தார். இது புலிகளின் ஸ்ரைல்.

புலிகளின் இதுபோன்ற கெடுபிடியில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மக்கள் இப்போதுதான் சற்று நின்மதியுடன் மூச்சுவிடத் தொடங்கியிருக்கின்றனர். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் வெளியானால் ராணி தியேட்டரில் சிவாஜி படம் வெளியாகும். அப்போது இரண்டு தியேட்டர்களும் வாழை மரங்கள் கட்டப்பட்டு மகரதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிகளை இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் பார்க்க முடிகிறது சசிகுமார். எங்கள் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போட்டுவிடாதீர்கள் என்று யாழ்ப்பாண இளைஞர்கள் உங்களிடம் யாசிக்கின்றனர்.

No comments:

Post a Comment