Monday, November 28, 2011

கூடங்குளம் போராட்டக்காரர்களை கைது செய்ய கவர்னரிடம் கோரிக்கை!

Monday, November 28, 2011
சென்னை : "கூடங்குளம் போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில், தமிழக அரசு கைது செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, கவர்னர் ரோசய்யாவிடம், அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி நிர்வாகிகள் கொடுத்தனர்.

கவர்னர் ரோசய்யாவை, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணியின் அகில இந்திய தலைவர் சத்தியசீலன், நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது, 81 வழக்குகள், கூடங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்தியாவிற்கு எதிராக போராடும் இவர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு கேட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால், தமிழக அரசு கேட்கும் மின்சாரத்தை, கூடங்குளத்திலிருந்து எடுக்கலாம் என்பதை உணர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மின் தடை ஐந்து மணி நேரம் முதல், எட்டு மணி நேரம் வரை நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் மின்சார பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சத்தியசீலன் நிருபர்களிடம் கூறியதாவது: அடுத்த மாதம் 5ம்தேதி, சென்னை பனகல் மாளிகை முன், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பங்கேற்கவுள்ளனர். அடுத்த மாதம் 12ம் தேதி, டில்லியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சத்தியசீலன் கூறினார்.

No comments:

Post a Comment