Sunday, November 20, 2011

அமெரிக்க கோர்ட் தீர்ப்பு விசா மோசடியில் ஈடுபட்ட சாமியார் குற்றவாளி!

Sunday, November 20, 2011
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள கவுடியா வைஷ்ணவா சொசைட்டி தலைவர், மத ஊழியர் விசாக்களை விற்று மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ளது மில்வாக்கி நகரம். இங்கு கவுடியா வைஷ்ணவா சொசைட்டி தலைவராக இருப்பவர் சாகர்சென் ஹல்தார் (31) (எ) கோபால் ஹரிதாஸ். ஆன்மீக குரு என்று கருதப்படுபவர். இவர் நடத்தும் கோயிலில் பலர் பணியாற்றுகின்றனர். ஆன்மீக சொற்பொழிவு, யோகா, பஜன்கள் போன்றவற்றில் இந்த சொசைட்டி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியர்கள் பலருக்கு மத ஊழியர் விசாவை விற்று மோசடியில் ஈடுபட்டதாக ஹரிதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் குடியேற ரூ.15 லட்சத்துக்கு மத ஊழியர் விசாக்களை ஹரிதாஸ் விற்றுள்ளதை குடியேற்ற உரிமை துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த வழக்கு விஸ்கான்சின் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 2010 ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து ஹரிதாஸ் அமெரிக்கா திரும்பிய போது கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையின் போது, அமெரிக்க குடியேற்றத் துறை சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.
ஹரிதாஸ் 25க்கும் அதிகமான ஆர்1 விசாக்களை பெற்று அவற்றை இந்தியர்களுக்கு விற்றுள்ளார். அத்துடன் கோயிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்க குடியேற்ற துறையிடம் விசா கேட்டு ஏராளமான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். விசா பெற்றவர்கள் பூசாரி அல்லது மதரீதியான பயிற்சி இல்லாதவர்கள். அமெரிக்கா வந்த பின் அவர்கள் விஸ்கான்சின் மாகாணத்தின் பல ஸ்டோர்களிலும் மற்ற இடங்களிலும் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரிதாசுக்கான தண்டனை பின்னர் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment