Sunday, November 20, 2011

விமானத்தில் பெண் ரகளை பயணிகளை தாக்கியதால் பரபரப்பு!

Sunday, November 20, 2011
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்ட ஜெர்மன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண், பணிப்பெண்கள், பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் எலிசபெத் மெர்ஷா (34). இவர், கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். தமிழ்நாட்டில் பல இடங்களை சுற்றிப் பார்த்தார். ஜெர்மனி செல்வதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு ஜெர்மனிக்கு செல்லும் விமானத்தில் ஏறினார். இவருடன் சேர்த்து 286 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன், எலிசபெத் திடீரென விமானத்தில் பயங்கரமாக சத்தம்போட்டு ரகளையில் ஈடுபட்டார். பின்னர் விமானத்துக்குள் ஓடினார். இதனால் பணிப்பெண்கள் வந்து அவரை பிடித்து சீட்டில் உட்காரவைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர், சீட்டில் அமர மறுத்து, விமானத்துக்குள் ஓடினார். பிடிக்க முயற்சித்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் ஏறி, எலிசபெத்தை பிடிக்க முயன்றபோது, அதிகாரிகளையும் தாக்க முயன்றார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

பின்னர் சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ஜெர்மனி அதிகாரிகள், எலிசபெத்தை அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் ஜெர்மனி விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

No comments:

Post a Comment