Wednesday, November 9, 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் வழக்கை சென்னையில் விசாரிக்க தடை கோரும் வழக்கு இன்று நடைபெறவுள்ளது!

Wednesday, November 09, 2011
டெல்லி: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேரின் கருணை மனுக்களையும் 11 ஆண்டு கால இழுபறிக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இவர்களுக்கு தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க 11 ஆண்டு கால அவகாசம் எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் கிட்டத்தட்ட 19 ஆண்டு காலமாக சிறையில் வாடி வருகிறோம். இந்த நிலையி்ல் எங்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது நியாயமல்ல. எனவே இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தூக்கிலிடுவதற்கு 8 வார கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடியிருந்தனர். அனைவரும் தீர்ப்பைக் கேட்டு பெரும் உற்சாகமடைந்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த தீர்ப்பை பெருவாரியாக வரவேற்றது.

இந்த நிலையில் வெங்கட் என்பவர் (இவர் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது) உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது. அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. நீதிபதிகளின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடுகிறது என்று கூறியிருந்தனர்.

இதை எதிர்த்து பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் சார்பில் மூ்த்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி அந்த வாதத்தை மறுத்து பதிலளித்தார். இதையடுத்து தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். பின்னர் கடந்த மாதம் இந்த வழக்கு வேறு ஒரு பெஞ்ச்முன்பு விசாரணைக்கு வந்தது. அதை சுட்டிக் காட்டிய ராம்ஜேத்மலானி பழைய பெஞ்ச் முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ராம்ஜேத்மலானி ஆஜராகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வழக்கில் ஆஜராவதற்காக உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

சென்னையிலேயே விசாரிக்கலாம்-தமிழக அரசு

இதற்கிடையே, தமிழக அரசு ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் போதுமான பாதுகாப்பு உள்ளது. எனவே வழக்கை இங்கிருந்து மாற்றத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பேர் தாக்கல் செய்துள்ள முந்தைய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 29ம் தேதி நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment