Tuesday, November 22, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை கடலில் படகில் சென்று மீனவர்கள் போராட்டம்!

Tuesday, November 22, 2011
நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் சென்று நேற்று முற்றுகையிட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். மீனவர் தினமான நேற்று கடல்வழியாக சென்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்பனை, கூத்தப்புளி, பெருமணல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவர்கள் கறுப்பு கொடி கட்டிய படகுகளுடன் இடிந்தகரை கடற்பகுதியில் குவிந்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் நடுக்கடலிலிருந்து அணிவகுத்து அணுமின் நிலையத்திற்கு மிக அருகே வந்தனர். சுற்றுவட்டாரங்களான கூடங்குளம், விஜயாபதி, செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானவர்கள் கடற்கரையில் திரண்டனர். அங்கு அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட சென்னை, திருவனந்தபுரம் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய படகுகள் முற்றுகை போராட்டம், 12 மணி வரை தொடர்ந்தது. இதையொட்டி நெல்லை எஸ்பி விஜயேந்திரபிதாரி தலைமையிலான அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். அணுமின் நிலைய கண்காணிப்பு கோபுரத்திலிருந்தும், வேலிகள் பின்னால் இருந்தும் கண்காணித்த போலீசார், படகுகள் அணுமின் நிலையம் அருகே வந்ததும் கடற்கரையில் பாதுகாப்பு சங்கிலி போல் நின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பதற்றம் நீடித்தது. பின்னர் படகுகள் அந்தந்த ஊருக்கு திரும்பின.

No comments:

Post a Comment