Saturday, November 19, 2011மணிலா : தேர்தல் மோசடி தொடர்பாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் குளோரியா மகபாகல் அரோயோ நேற்று கைது செய்யப்பட்டார். பிலிப்பைன்சில் கடந்த 2001 முதல் 2010 வரை அதிபராக இருந்தவர் குளோரியா. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2007ம் ஆண்டு நடந்த மகின்டானோ மாகாண இடைத்தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி முறைகேடு நடந்ததால், குளோரியாவின் கட்சி ஆதரவாளர்கள் 12 பேரும் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. எனினும், இவர் மீது முறைப்படி வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற குளோரியா திட்டமிட்டார். அதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை விமான நிலையம் வந்த அவரை, அதிகாரிகள் வெளிநாடு அனுப்பாமல் திருப்பி அனுப்பினர். இதுதொடர்பாக அவசரமாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த மணிலா நீதிமன்றம் குளோரியாவை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது. மேலும், வெளிநாடு செல்லவும் தடை விதித்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ÔÔமணிலாவில் உள்ள செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையில் குளோரியா சிகிச்சை பெற்று வருகிறார். கைது வாரன்ட் பற்றி அவரிடம் கூறினோம். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இப்போது அவர் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார். மருத்துவமனை அறைக்கு வெளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றனர்.
குளோரியா மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எல்லா குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு பதவியேற்ற அதிபர் பெனிக்னோ அகினோ, ஊழலில் சம்பந்தபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவேன் என்றார். குறிப்பாக முன்னாள் அதிபர் குளோரியா மீதான புகார்களை விசாரிக்க கமிஷன் அமைக்க முடிவு செய்தார். அதற்கு பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கமிஷன் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment