Wednesday, November 2, 2011

இந்தியா செல்லும் போர்வையில் நோயாளர் கடத்தல்!

Wednesday, November 02, 2011
புற்றுநோய்க்கான சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை - இப்பன்கடுவ பிரசேத்தைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தயாரான ஈ.சி.காந்தி என்பவர் கடந்த மாதம் 18 ம் திகதி தாம் கண்டி பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக தெரிவித்துள்ளார்.

தம்மை வைத்தியர்களாக இனங்காட்டிக் கொண்ட சிலர் பெண்ணின் நோயை குணப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தமையை அடுத்தே அவர் அங்கு சென்றதாக குறிப்பிட்டார்.

அதன்பின்னர், நோயாளர் காவு வாகனம் ஒன்றில் தன்னை 4 பேர் கொண்ட குழு கொழும்பு நோக்கி அழைத்து வந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

வரக்காபொல பிரதேசத்தை அண்மித்த போது திரவ பால் பைக்கற் ஒன்று தமக்கு வழங்கப்பட்டதாகவும், பின்னர் தாம் சுயநினைவுக்கு திரும்பிய வேளையில் வேறு உடை அணிவிக்கப்பட்டு தனிமையான அறையொன்றில் வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தன்னிடம் இரத்தம் பெறப்பட்ட பின்னர் விருப்பத்திற்கு ஒவ்வாத வகையில் தலைமுடியும் வெட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மனித உறுப்புகளை பெற்று கடத்தும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், எமது செய்திச் சேவை மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரசிங்கவிடம் வினவியது.

கண்டி பொது வைத்தியசாலை போன்ற பிரதான மருத்துவமனையொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக கூறுவது நம்பத்தகுந்த விடயம் அல்ல வென குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும்., குறித்த சம்பவத்துடன், மருத்துவமனை தொடர்பு பட்டுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், கண்டி பொது மருத்துவமனை வளாகத்திலேயே குறித்த மருத்துவர்களாக இனங்காட்டிய சிலரை சந்தித்தாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து ஊடகங்களுக்கு அறிவிப்பதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment