Friday, November 18, 2011

ஒபாமாவை கொல்ல முயன்றதாக வாலிபர் மீது வழக்கு பதிவு!.

Friday, November 18, 2011
பிட்ஸ்பர்க்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. கமாண்டோக்கள் விரைந்து சென்று சோதனை நடத்திய போது, மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை கைப்பற்றினர். அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கி இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு செல்லும் எல்லா சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சோதனையின் போது மாளிகையின் ஒரு கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி குண்டு விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பரபரப்பு அடைந்த அதிகாரிகள், மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் பென்சில்வேனியாவில் ஆஸ்கர் ஆர்டெகா என்ற 21 வயது வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்தனர். அவரிடம் பென்சில்வேனியா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஒபாமா சாத்தான், கிறிஸ்துவுக்கு எதிரானவர் என்று கோஷம் போட்டார்.

இதையடுத்து, அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஆகியோரை கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை பிட்ஸ்பர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2005ம் ஆண்டு வாலிபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போதைய அதிபர் பில் கிளின்டனை கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment