Friday, November 18, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 நாள் ஆய்வு முடிந்தது : மத்திய குழு திருப்தி!.

Friday, November 18, 2011
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது மாநிலக் குழுவில் இடம் பெற்றிருந்த போராட்டக்காரர்கள் உங்களது லெக்சரைக் கேட்க நாங்கள் வரவில்லை. உங்களை அறிவாளிகள் என்று கூற முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டதாக மத்திய குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் கூறியுள்ளார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. முன்னதாக மத்திய குழு கடந்த 3 நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய குழுவின் முத்துநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கூடங்குளத்தில் நவீன மயமான அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அணு உலைகளைச் சுற்றி 2 அடுக்கில் கோபுரக் கட்டுமானம் உள்ளது. பழுது ஏற்பட்டால் குளிரூட்ட 4 வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் 4 டீசல் என்ஜின் ஜெனரேட்டர்கள் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைக் காற்றைப் பயன்படுத்தி குளிரூட்டும் சாதனம் உள்ளது. மையக்கரு பொருள் எரிந்தாலும் கதி்ர்வீச்சைத் தடுக்கும் கோர்கேச்சர் சாதனம் உள்ளது.

அரசின் சட்டரீதியான விஷயங்களில் மத்திய குழு கேள்வி எழுப்ப முடியாது. எங்களது வரையறைக்கு உட்பட்டுத்தான் நாங்கள் பேச முடியும். நாங்கள் மீண்டும் மாநிலக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை.

கடந்த 8ம் தேதி நடந்த கூட்டத்தின்போது போராட்டக்காரர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைப் படித்தோம். அதன்பிறகு நாங்கள் கடந்த 3 நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தோம். மேலும் கூடங்குளம் மக்களையும் சந்தித்து பேசினோம்.

போராட்டக்காரர்கள் தரப்பில் 50 கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நாங்கள் 38 பக்கங்களில் விளக்கம் தந்துள்ளோம். மேலும் விவரங்களை அவர்கள் அணு சக்தி இணையதளத்தில் காணலாம் என்றோம். ஆனால் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

உங்களது லெக்சரை கேட்க நாங்கள் வரவில்லை. நீங்களாகவே உங்களை அறிவாளிகளாக கருதிக் கொள்ள முடியாது என்றனர். மிகவும் சந்தோஷம். நாங்கள் அறிவாளிகளாக இல்லையா என்பதை சொல்ல வேண்டியது மற்றவர்கள்தான்.

உலகம் முழுவதும் 433 அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும் 65 அணுமின் நிலையங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம்.

மக்களுக்கு உண்மையை மட்டுமே சொல்ல விரும்புகிறோம். பொய் சொல்லி மக்களைக் குழப்ப விரும்பவில்லை, நினைக்கவில்லை. அதைச் செய்யவும் விரும்பவி்ல்லை.

பேச்சுவார்த்தை தொடரும். சுமூக தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே மத்திய குழுவில் இடம் பெற்றிருந்த சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா கூறுகையில்,

கூடங்குளம் அணுமி்ன் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. அங்கு கதிர்வீச்சு அபாயமே இல்லை என்றார்.

No comments:

Post a Comment