Thursday, November 10, 2011

நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஓரினச் சேர்கைக்கு அழைத்து கொள்ளையிட்டு வந்த மூன்று இளைஞர்கள் கைது!

Thursday, November 10, 2011
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஓரினச் சேர்க்கைக்கு (தன்னினச் சேர்க்கை) அழைத்து அல்லது அவர்களின் விருப்பத்திற்கு இணங்குவது போன்று நடித்து வெளிநாட்டவர்களின் பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை திருடி வந்த திட்டமிட்ட குழுவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தைச் சேர்ந்த விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு ஏந்துக்கால, தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் மூவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சந்தேக நபர்களான இளைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து தனியாக இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளை இனங்கண்டு அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அந்த வெளிநாட்டவருடன் உல்லாசமாக இருப்பதற்கு இணக்கம் தெரிவித்து தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

இதேபோன்று, நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் உள்ள பிரசித்தமான ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டவரான விக்டோரியா லூவிஸ் வில்பர்ட் என்பவருடன் சந்தேக நபர்களில் ஒருவர் நட்பு கொண்டுள்ளார்.

பின்னர் அந்த வெளிநாட்டவருடன் உல்லாசமாக இருப்பதற்கு விருப்பம் தெரிவிப்பது போன்று நடித்து தனியாக அழைத்துச் சென்ற அந்த இளைஞன், ஏனைய இரு சந்தேக நபர்களுடன் சேர்ந்து பிரான்ஸ் நாட்டவரின் பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.

கொள்ளையிட்ட பணத்தைக் கொண்டு போதைப்பொருள் உட்கொண்டுள்ளதுடன் கணினி, செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை சந்தேக நபர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கொள்ளையிடப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

No comments:

Post a Comment