Thursday, November 17, 2011சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை தேசிய பிரச்னையாக கருதி, உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
நேற்று எழுதியுள்ள கடிதம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல், கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்த
விவரங்களை 7.6.2011, 21.6.2011, 10.10.2011 மற்றும் 7.11.2011 ஆகிய தேதிகளில் உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த தாக்குதல் காரணமாக, தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஒரு தேசிய பிரச்னையாக அதுவும் இந்தியா மீது நடத்தப்படும்
தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலால், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. மிக
சமீபத்திய சம்பவமாக 15.11.2011 அன்று ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம்
அடைந்தார். அவரது படகும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் கச்சத்தீவு எதிரில் உள்ள சர்வதேச கடல் எல்லையில் நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த 15 பேர் அதிவேக ரோந்து படகில்
விரைந்து வந்து, தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் செல்வராஜ் என்ற மீனவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். இது
போன்ற தாக்குதலை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும், பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக மீனவர்கள்
உணர்கின்றனர்.
இலங்கை அரசு இந்த விஷயத்தில் இரட்டை நிலையை கடைபிடிக்கிறது. அவர்களது கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலையில், இலங்கை அரசு
தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறது. பாக்ஜலசந்தி பகுதியில் பல தலைமுறைகளாக தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்டு வரும்
அப்பாவி மீனவர்கள் மீது போக்கிரித்தனமாக நடத்தப்படும் தாக்குதலை இலங்கை அரசு கட்டுப்படுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, இது
தொடர்பாக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment