Monday, November 21, 2011

உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை என முதல்வர் ஜெயலலிதா!

Monday, November 21, 2011
சென்னை : பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை அரசு கடுமையாக உயர்த்தி உள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். கட்டண உயர்வை அமல்படுத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்றும் கூறினார். இதன்படி, சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்பது 42 பைசா ஆகவும்; விரைவு மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 32 பைசா என்பது 56 பைசா ஆகவும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 38 பைசா என்பது 60 பைசா ஆகவும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 52 பைசா என்பது 70 பைசா ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நகர பேருந்துகளை பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், சென்னை தவிர்த்த பகுதிகளில் அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், ஆவின் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு எந்த தேதியில் இருந்து அமலாகும் என அரசு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியான நள்ளிரவு முதலே பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல் தமிழக அரசு இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் பால் விலையும், அறிவிப்பு வெளியான அடுத்தநாள் காலையே அமலானது. ஆவின் பால் லிட்டருக்கு ணீ9 வரை அதிகரித்தது. சில்லரை விற்பனையில் ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சமாக ணீ2 வரையும், அதிகபட்சமாக ணீ7 வரையும் அதிகரித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் பால் லிட்டருக்கு ணீ4 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பஸ் கட்டண உயர்வையும் பால் விலை உயர்வையும் திரும்பப் பெறக்கோரி மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் முடிவு அரசுக்கு இல்லை என முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில் 22 லட்சம் லிட்டர் பால்கூட, ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்ய இயலவில்லை.

கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான உரிய விலையை 45 நாட்களுக்கு மேலாகியும், பால் உற்பத்தியாளர்களுக்கு தராமல் நிலுவையில் வைத்திருந்தால், அவர்கள் ஆவின் நிறுவனத்துக்கு எவ்வாறு பால் வழங்க முடியும். ஆவின் பால் விலையை உயர்த்தியதன் மூலம்தான் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை, உரிய நேரத்தில் வழங்க முடியும். எனவே பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பஸ் கட்டண உயர்வுக்கும் இதுபோன்ற சமாதானத்தையே அவர் கூறியிருக் கிறார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போகும் நிலையில் உள்ளன. டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து விட்டது.

போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்கு கட்டண உயர்வைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில்தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment