Monday, November 21, 2011இனப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் தாமதிக்க கூடாதென தமிழர் வி்டுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாடு எட்டப்படுவதன் மூலமே இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தொடர்ந்தும் கருதினால் அதற்கான தீர்வு எப்போதும் கிடைக்காது என தமிழர் வி்டுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.
பெருமளவு பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அறியாமல் உள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட்ட போது அவர்களின் வீடுகளில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கில் வாழும் மக்களுக்கு அகதிகளுக்கு உதவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் அதனை செய்திருப்பார்கள் எனவும் துரதிஷ்டமாக அகதி முகாம்களுக்கு செல்வற்கு பல சர்வதேச உதவி நிறுவனங்களுக்குக் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நூற்றுக்கணக்கான விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் போராளிகள் அகதி முகாம்களிலிருந்து தப்பித்து வெளிநபர்களின் உதவியுடன் இந்தியாவிற்குச் சென்றுள்ளதாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது சமஷ்டி முறையை விரும்பாதிருந்தால் சமஷ்டி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆலோசனை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் வீ.ஆனந்தசங்கரி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment