Wednesday, November 23, 2011சென்னை : சிபிசிஐடி சிறப்பு படையினர், கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்த தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் பாதுகாப்பு படை தலைவர் தவுபிக், டெல்லி அருகே கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். தமிழகத்தில் செயல்பட்டு வந்த முஸ்லிம் பாதுகாப்பு படை என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் தவுபிக் (34). கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை சிபிசிஐடி சிறப்பு படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லி அருகே நொய்டாவில் தவுபிக் மறைந்திருப்பதாக அங்குள்ள தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் தவுபிக்கை சுற்றிவளைத்து பிடித்தனர். தவுபிக் பிடிபட்டது குறித்து தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சிபிசிஐடி சிறப்பு பிரிவு போலீசார் டெல்லி விரைந்தனர். தவுபிக்கை கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்தவர் தவுபிக். 1996-ல் தனது நண்பரின் மனைவியிடம் தகராறு செய்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவுபிக், ஜாமீனில் வெளியே வந்தார். சில மாதங்களுக்கு பிறகு அதிராம்பட்டினத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கிலும் தவுபிக் கைது செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு மும்பை அருகே கொர்காபூரில் பஸ்சில் குண்டு வெடித்த வழக்கில் தவுபிக் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர், ரியாத்துக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார். சில நாட்களில் அந்த வேலையும் பறிபோய் விட்டது. ரியாத்தில் சுற்றித் திரிந்தபோதுதான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தவுபிக்கை பாகிஸ்தானுக்கு அழைத்து சென்று தீவிரவாத பயிற்சி கொடுத்தனர். வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தீவிரவாத போதனைகளும் அளிக்கப்பட்டன. 2002-ல் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தவுபிக், முஸ்லிம் பாதுகாப்பு படை என்ற பெயரில் தனி அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் சார்பில் குற்றாலத்தில் 22 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்தார். அப்போது ஐதராபாத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஒருவர், அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. இதுபற்றி சென்னை போலீசாருக்கு ஐதராபாத் போலீசார் தகவல் கொடுத்தனர்.
சென்னை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். தவுபிக்தான் அடிக்கடி ஐதராபாத் தீவிரவாதியுடன் பேசியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற முஸ்லிம் பாதுகாப்பு படையை ஏற்படுத்தியதும், அதற்காக குற்றாலத்தில் பலருக்கு பயிற்சி அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே இந்த இயக்கத்தை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டதால், போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
2004-ல் ஜாமீனில் வெளியே வந்த தவுபிக் திடீரென தலைமறைவானார். அவருடன் கைதான 22 பேரும் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். தவுபிக் மட்டும் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தவுபிக்கை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, வேறு ஏதாவது சதித் திட்டம் தீட்டியிருந்தார்களா என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
தமிழக போலீசாரால் தேடப்படும் தீவிரவாதிகள் விவரம்
* அபுபக்கர் சித்திக் என்ற காக்கா (46). நாகூரை சேர்ந்தவரான இவர், பாஜ நிர்வாகிக்கு பார்சலில் குண்டு அனுப்பியது உள்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளது. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
* அஷ்ரப் அலி (34). கோவையை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தேடப்படுபவர்.
* அயூப் என்ற அஷ்ரப் அலி (33). இஸ்லாம் டிபென்ஸ் ஃபோர்ஸ் (ஐடிஎப்) என்ற அமைப்பை சேர்ந்தவர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குண்டு வைக்க திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
* இப்ராகிம் (31). என்டிஎப் இயக்கத்தில் இருந்த இவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
* முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் (32). மேலபாளையத்தை சேர்ந்தவர். சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வருபவர்.
* முஜிபுர் ரகுமான் என்ற முஜி (38). கோவையை சேர்ந்தவர். 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
* முஸ்டாக் அகமது (53). வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். அல்-உம்மா அமைப்போடு தொடர்புடையவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். தீவிரவாதிகளுக்காக டெட்டனேட்டர் வாங்கி வந்தவர். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
* ஜாகுபர் சாதிக் என்ற சாதிக் என்ற டெய்லர் ராஜா (28). கோவையை சேர்ந்தவர். அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது.
* நூகு என்.பி என்ற ரஷீத் (21). கேரளா கல்குட்டையை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.
* குஞ்சு முகமது என்ற கனி (42). கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்.
No comments:
Post a Comment