Thursday, November 24, 2011சிறுவர் இல்லம் ஒன்றை நடத்தும் பேரில், குழந்தைகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டவர்களுக்கு விற்பனை செய்து வந்த பாரிய வியாபார நடவடிக்கை ஒன்றை கண்டறிந்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை, நேற்று மாலை மொறட்டுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 70 சிறுவர், சிறுமியரை மீட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சிறுவர்களை கொள்வனவு செய்ய சென்றிருந்த, அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த இரண்டு தம்பதியினரும், குழந்தை விற்பனை செய்யும் தரகர் ஒருவரும், இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்துள்ளனர்.
குழந்தைகளை கொள்வனவு செய்ய இந்த வெளிநாட்டு தம்பதியினர், 7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சிறுவர் இல்லத்திற்கு வழங்கியுள்ளதுடன் இலங்கை பெண் ஒருவர் 35 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். இடைத் தரகர்களே இவர்களை சிறுவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மொறட்டுவ ராவத்தாவத்தை பகுதியில் இயங்கி வரும், இந்த சிறுவர் இல்லம் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது. கன்னியாஸ்திரி ஒருவர், இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியாக செயற்பட்டு வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
அதிகாரச் சபையின் முறைப்பாடுகளை பதிவு செய்யும், 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேற்று கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்படி சிறுவர் இல்லம் சுற்றிவளைக்கப்பட்டது. இதன் போது, சிறுவர் இல்லத்தில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளும், குழந்தைகள் உள்ள 15 தாய்மாரும், 6 கர்ப்பிணிகளும் இருந்துள்ளனர்.
அனாதை குழந்தைகளை பராமரித்து, அவர்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் பல காலமாக நடந்து வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. அதேவேளை சிறுவர் இல்லத்தில், இருந்த வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment