Saturday, November 26, 2011சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சூறைக் காற்று வீசுகிறது. ராமேஸ்வரத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் 2வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் இறந்தனர்.
கடந்த 22ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக நேற்று முதல் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் கன மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் பலத்த சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் ஆறாக மாறியுள்ளன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 நாளாக மழை விடாமல் பெய்து வருவதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்றும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மழை காரணமாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் 2 நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளில் பெய்த மழையால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நேற்றிரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் ஒரே இரவில் 15 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, ஜார்ஜியார் நகர், மிக்கேல் நகர் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் இன்று அதிகாலை முதல் புயல்காற்று வீசி வருகிறது. மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த ஏராளமான பைபர் படகுகளை ஆக்ரோஷமாக எழும்பிய அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அவை கடலுக்குள் ஒன்றோடொன்று மோதி பலத்த சேதம் அடைந்தன.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அதிகாலை 4 மணியளவில் மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தில் தண்ணீர் கொட்டியது. சன்னதி பஜார், குற்றாலநாதர் கோயில் வெளிப்பிரகாரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சன்னதி பஜார் பகுதியில் ஐயப்ப சீசனை முன்னிட்டு ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. குமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள்.
No comments:
Post a Comment