Wednesday, November 16, 2011

போதை நகரமாகிறது தலைநகரம் : ஹெராயின், கோகைன் புழக்கம் 3 மடங்கு அதிகரிப்பு!

Wednesday, November 16, 2011
புதுடெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லி, இப்போது போதைப் பொருள் கடத்தல் பூமியாக மாறி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து கவலை தெரிவித்த போலீசார், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் போதைப் பொருள் பறிமுதல் மூன்று மடங்கு அதிகரித்து விட்டது என்கின்றனர். ஹெராயின், கஞ்சா, கோகைன் போன்ற போதைப் பொருட்கள் கிடைக்காத இடமே இல்லை என்ற அளவுக்கு நகரில் போதைப் பொருள் பழக்கமும் புழக்கமும் பெருகி விட்டது. அதிர்ச்சி அளிக்கக் கூடிய இந்த விஷயத்திற்கு ஆதாரமாக, டெல்லி போலீஸ் நிறைய புள்ளிவிவரங்களை தருகிறது. அதில் ஒன்றுதான் இது: 2010ல் கைப்பற்றப்பட்ட ஹெராயின் 15.26 கிலோ. இந்தாண்டில் இதுவரை சிக்கியது மட்டும் 48.62 கிலோ.

போதைக்கு சிக்கிய 50 ஆயிரம் அடிமைகள்!

இன்னும் அதிகளவில் போதைப் பொருட்கள் டெல்லி சந்தையில் தாராளமாக கிடைப்பதாகவும், இங்கு வந்து சேரும் போதைப் பொருட்களில் 50 சதவீதம் கூட கைப்பற்ற முடியவில்லை என்றும் கூடுதல் தகவல் தருகிறது போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ். போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் 50 ஆயிரம் பேர் என்பது போலீஸ் கணக்கு. ஆனால், உண்மையில் அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதன்காரணமாக தான் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டினர்தான் கடத்தல்காரர்களாக செயல்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து ஹெராயின், கோகைன் போன்ற பொருட்களை கடத்தி வருவதே அவர்கள்தான்.

கோகைன் சப்ளை செய்யும் தென் ஆப்ரிக்கா!

நேரடியாக இந்தியாவுக்குள் போதைப் பொருட்களை கொண்டு வர முடியாது. அது கடினம் என்பதால், நேபாளம் வழியாக கடத்துகின்றனர். அதற்கென கைதேர்ந்த ஏஜென்ட்கள் இருக்கின்றனர் என்பதால், கடத்தலை தடுப்பது கவலைக்குரிய விஷயமாகி விட்டது என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். கோகைன் மட்டும் தென் ஆப்ரிக்காவில் இருந்து வருகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், அவை பல வழிகளில் வந்து சேருவதால், ஒரு வழியை தடுத்தால், இன்னொரு வழியில் உள்ளே புகுந்து விடுகிறது என்ற உண்மையையும் ஒப்புக் கொள்கின்றனர். உதாரணமாக, சைக்கிள் சீட் கவர்களில் அடைக்கப்பட்டு, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி போலீசாரும் களம் இறங்கியுள்ளனர். ‘‘போதைப் பொருள் பயன்படுத்துவர்களை எப்போதெல்லாம் பிடிக்கிறோமோ, அப்போதெல்லாம் அது எங்கிருந்து வருகிறது என்ற விசாரணையைதான் மேற்கொள்கிறோம். எனவே கூடிய விரைவில் கடத்தலை தடுத்து விடுவோம்’’ என்று போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்தார். மேலும் மாவட்ட போலீசாரும், இதற்கென உள்ள கிரைம் பிராஞ்ச், ஸ்பெஷல் பிரிவு போலீசாரும் கடத்தலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் கமிஷனர்.

No comments:

Post a Comment