Sunday, November 13, 2011

நியூயார்க் விமான நிலையத்தில் அப்துல்கலாமுக்கு மீண்டும் அவமதிப்பு: ஏர்போர்ட்டில் கோட்,ஷூவை கழற்றி அப்துல் கலாமிடம் 2 முறை வெடிகுண்டு சோதனை!

Sunday, November 13, 2011
நியூயார்க்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, சோதனை என்கிற பெயரில் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவமதித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டும் இதேபோல அமெரிக்கர்கள் அவமரியாதை செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.

அப்துல் கலாமை சோதனை என்கிற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் அடுத்தடுத்து 2 முறை அவமதித்திருக்கும் செயல் இந்தியர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டும் இதேபோலத்தான் கலாமை அவமதித்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தில் வைத்தே கலாமை அவமதித்து இந்தியர்களை அதிர வைத்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். இந்த சம்பவத்தை அப்போது மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மீடியாவில் செய்திகள் வெளியான பின்னர்தான் உப்புக்குச் சப்பு கண்டனத்தை தெரிவித்தது மத்திய அரசு. நாடாளுமன்றத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அரசும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் தற்போது நடந்துள்ள 2வது சம்பவத்திற்கு மத்திய அரசு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் கலாம் களம் இறங்கி அணு உலைக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருப்பதால் இந்த உடனடி எதிர்ப்பைக் காட்டியுள்ளது மத்திய அரசு என்று தெரிகிறது.

அக்டோபர் 29ம் தேதியன்று இந்த சம்பவம் நியூயார்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லி திரும்புவதற்காக ஜான் எப் கென்னட விமான நிலையத்திற்கு வந்தார் அப்துல் கலாம். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை சோதனையிட வேண்டும் என்று கூறி அவரது ஓவர் கோர்ட், ஷூ ஆகியவற்றை கழற்றி வாங்கி எடுத்துச் சென்றுள்ளனர். வெடிபொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதற்காக இந்த சோதனையை நடத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த அடாவடி செயல் இந்தியாவில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சோதனைகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி 2வது முறையாக அவர் அவமதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோல மீண்டும் நடந்தால் இந்தியாவும் இதேபோன்ற செயலில் ஈடுபடும் என்று எச்சரிக்குமாறும் நிரூபமா அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மன்னிப்பு

கலாமை அவமதித்ததற்காக அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் அது உறுதியளித்துள்ளது.

No comments:

Post a Comment