Sunday, November 27, 2011

உதவிகள் நிறுத்தினார் கிலானி நேட்டோ படை குண்டு மழை பாக். வீரர்கள் 28 பேர் பலி!

Sunday, November 27, 2011
இஸ்லாமாபாத், : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 28 பேர் பலியாகினர். இதனால், அமெரிக்கா, பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தலிபான் மற்றும் அல்&கய்தா தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பைசாய் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனை சாவடி உள்ளது. அங்கு 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கியிருந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்க நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன. பைசாய் சோதனை சாவடி மீது அவை திடீரென குண்டு மழை பொழிந்தன. தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்களில் இருந்து சோதனை சாவடியை நோக்கி வீரர்கள் சரமாரி துப்பாக்கி சூடும் நடத்தினர்.

இதில் பாகிஸ்தான் வீரர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.இந்த தாக்குதலால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் 28பேர் பலியானதை அறிந்ததும், எல்லை வழியாக ஆப்கனில் நேட்டோ படையினருக்கு அனுப்பப்படும் உணவு, மருந்து போக்குவரத்தை அடியோடு நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.

அந்த பகுதியில் தீவிரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததா, தவறுதலாக வீரர்கள் மீது குண்டு வீசப்பட்டதா என அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment